சல்வடோர் அணி வீரர்கள் இடைநிறுத்தம்
Monday, July 24th, 2017ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் கொன்ககாப் தங்கக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியின்போது, எதிரணி ஐக்கிய அமெரிக்க வீரர்களைக் கடித்த எல் சல்வடோர் வீரர்கள் இருவருக்கு இடைநிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக, கொன்ககாப், நேற்று அறிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற காலிறுதிப் போட்டியின்போது இடம்பெற்ற வெவ்வேறு இரண்டு சம்பவங்களுக்காக, ஹென்றி றொமேரோவுக்கு ஆறு போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அணித்தலைவர் டர்வின் செரெனுக்கு மூன்று போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் முன்கள வீரரான ஜொஸி அல்டிடோரின் பின் தோளில் றொமேரோ கடித்திருந்த நிலையில், ஐக்கிய அமெரிக்க பின்கள வீரர் ஓமர் கொன்ஸலேஸை, செரின், இரண்டாவது பாதியில் கடித்திருந்தார்.
விளையாட்டுத் தன்மையற்ற நடத்தைக்காக, இத்தடைகளை, கொஸ்டாறிக்காவுக்கெதிரான ஐக்கிய அமெரிக்காவின் அரையிறுதிப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக கொன்ககாப் அறிவித்திருந்தது.
அடுத்தாண்டு உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளிலிருந்து எல் சல்வடோர் வெளியேற்றப்பட்டுல்ள நிலையில், அடுத்த கோப்பா சென்றோஅமெரிக்கானா அல்லது 2019ஆம் ஆண்டு ஆரம்பமாகும் 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு தகுதிகாண் போட்டிகளின்போதே மேற்படி தடைகள் அமுலுக்குள்ளாகும்.
Related posts:
|
|