சமஷ்டி வேண்டாம் என சுமந்திரன் சொல்லியிருப்பாரா? – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி!

Monday, September 3rd, 2018

தமிழ் பேசும் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கு அடிப்படையாகத் திகழ்வது சமஷ்டி முறையே என்றும் அத்தகைய தமிழர்களின் அபிலாஷைகளை மறுதலித்து சமஷ்டி வேண்டாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சொல்லியிருப்பாரா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாம் எமது மக்களின் உயிர் நாதமாகத் திகழும் அரசியல் தீர்வு விடயத்தில் உறுதியாகவே இருந்துவருகின்றோம். மாகாணங்களுக்கு இறைமைகள் பகிரப்படவேண்டும் என்றும் பகிரப்பட்ட அதிகாரங்கள் மத்தியினால் பறிக்கப்படக் கூடாது என்பதோடு மாகாணங்களின் அதிகாரங்களில் மத்திய அரசின் தேவையற்ற தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதுமே எமது நிலைப்பாடாக இருந்துவருகின்றது.

இதுவே சமஷ்டியின் அடிப்படை அம்சங்களாகும்.  “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற எமது கட்சியின் கொள்கையில் தமிழ் பேசும் மக்களின் இத்தகைய அரசியல் அபிலாஷைகள் அனைத்தும் உள்வாங்கப் பட்டிருக்கின்றது.

ஆனாலும் எமது அரசியல் இலக்கை அடைவதற்கான பயணத்தை எங்கிருந்து தொடங்குவது என்பதுதான் இங்கு கேள்வி. இந்த யதார்த்த நிலையிலிருந்தே நாம் எமது இலட்சியப் பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்பு வாய்ந்த அதிகாரத்தில் இருக்கும் ஒருவரான சுமந்திரன் அவர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மறுலித்து கருத்து தெரிவித்திருருக்க மாட்டார் என்றே நாம் நம்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: