‘கடல்சார் பொருளாதாரம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, January 21st, 2020


எமது நாட்டில் கடற்றொழில் தொடர்பில் மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் தனது, ‘நாட்டைக் கட்டியெழுப்புகின்ற சுபீட்சத்தின் நோக்கு’என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் விரிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

‘இந்து சமுத்திரத்தில் 5 இலட்சம் சதுர கிலோ மீற்றர் கடல் பிராந்தியத்தில் 1700 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலான கரையோரத்திற்கு உரிமை கோரும் நாம், பாரிய நதிகள், நீர்த் தேக்கங்களுக்கு உரிமை கோரும் நாம், மிக விரைவில் கடற்றொழிலில் தன்னிறைவு காண வேண்டும்’ என மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த மாதம் 03ஆம் திகதி மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையிலும் கடற்றொழில் தொடர்பில் அழுத்தமாகக் கூறியிருந்ததையும் இங்கு நான் மீள நினைவுகூற விரும்புகின்றேன்.

‘கடல்சார் பொருளாதாரம் தொடர்பாகவும் இதைவிடக் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ள மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள், கடற்றொழிலை முன்னேற்றுவதற்குத் தேவையான திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தி இருக்கின்றார்.

அந்த வகையில், இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அமைச்சினை என்னிடம் ஒப்படைத்துள்ள மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும், கௌரவ பிரதமர் அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த அமைச்சினை என்னிடம் ஒப்படைத்த மாண்புமிகு ஜனாதிபதி அவர்களதும், கௌரவ பிரதமர் அவர்களதும் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் எனது செயற்பாடுகள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்படும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

சூழவும் கடலை கொண்டுள்ள நாம் ரின் மீன்களையும், கடலுணவு வகைகளையும் இறக்குமதி செய்வதற்காக பெரும்பாலான அந்நியச் செலாவணியை செலவு செய்து கொண்டிருக்கின்ற நிலைமை மாற்றப்பட வேண்டும்.

இன்று சுமார் 50 ஆயிரம் மில்லியன் ரூபா வரையில் எமது கடலுணவு ஏற்றுமதி காணப்படுகின்ற நிலையில், கடலுணவு சார்ந்த இறக்குமதி செலவீனம் சுமார் 35 ஆயிரம் மில்லியன் ரூபாவாக இருக்கின்றது. எனவே, இறக்குமதி செலவீனங்களை போதியளவில் குறைத்து, ஏற்றுமதி வருமானத்தை கூடுமான வரையில் அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்கேற்ற வகையில் இத்தொழிற்துறையை நவீன தொழில்நுட்பங்களுடன் மேலும் விஸ்தரிக்க வேண்டும்.

எமது மக்களுக்கு நியாயமான விலைகளில் தரமான கடல் உணவு மற்றும் நன்னீர் உயிர்வாழ் உணவு வகைகள் கிடைப்பதற்கும் அதே நேரம், எமது ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் அதி கூடிய பங்களிப்பினை மேற்படி உற்பத்திகளின் மூலமாக ஈட்டிக் கொடுப்பதற்கும் நாம் கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகளை கூடிய விரைவில் வினைத்திறன் மிக்கதாகக் கட்டியெழுப்ப வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் படகுகள் எமது கடல் வளப் பகுதிகளுக்குள் மேற்கொள்கின்ற தொழில் முயற்சிகளை, எமது நீண்ட நாட்கள் படகுகளைக் கொண்டு, அல்லது வெளிநாட்டு நீண்ட நாட்கள் படகுகளை வாடகைக்கு அமர்த்தி எமது கடற்றொழிலாளர்களை –கடற்றொழிலில் ஆர்வமிக்கவர்களைக் கொண்டு நாமே அவற்றை தரமிக்க வகையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

எமது கடற்றொழிலுக்கு உரித்தான வளங்களை தூர நோக்கு அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதும், பேணிப் பாதுகாக்க வேண்டியதுமான தேவை இருக்கின்றது.

அதே நேரம், கடற்றொழில் சார்ந்து வசதிகளை வழங்கக்கூடியதான துறைகளின் உட்கட்டமைப்பு ஏற்பாடுகள் அனைத்தும், நவீன வசதிகளைக் கொண்டதான புதிய தொழில்நுட்பங்களுடன் மறுசீரமைக்கப்பட வேண்டியத் தேவை இருக்கின்றது.

அனைத்து கடற்றொழிலாளர்களின், நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களின் நலன்கள் கருதியும், தற்போதிருக்கின்ற அவர்களது வாழ்வாதாரங்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையிலும், அவர்களது வாழ்வாதாரங்களை மேலும் முன்னேற்றக்கூடிய வகையிலும் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியத் தேவை இருக்கின்றது.

உழைப்பிற்கேற்ற வருமானம் என்ற வகையில் இத்துறைகளை மேலும் வளர்த்தெடுப்பதன் மூலமாக ஆர்வமுள்ள எவரும் இத்தொழிலில் ஈடுபடக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான தேவையும், இத்துறைகள் சார்ந்து மனைப் பொருளாதார தொழில் முயற்சிகளையும், பண்ணைகளையும் பரந்தளவில் ஏற்படுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது.

அத்துடன் இத்துறை சார்ந்த அதிகாரிகளினது, பணியாளர்களது சேவைகளை மென்மேலும் வினைத்திறன் மிக்கதாக மேம்படுத்த வேண்டியத் தேவை இருக்கின்றது.

இத்துறை சார்ந்து செயற்பாட்டில் இருந்து வருகின்ற நிறுவனங்கள் குறித்தும் மிக அதிகமான அவதானங்களை செலுத்த வேண்டி இருக்கின்றது. குறிப்பாக, எமது அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகின்ற தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவர் நிறுவகம் (Nயுசுயு)இ தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு  அபிவிருத்தி அதிகார சபை (Nயுஞனுயு) மற்றும் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்ற நிலையில், அவற்றை மென்மேலும் மேம்படுத்த வேண்டியத் தேவையும், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம், சீனோர் மற்றும் நோர்த் சீ – வடகடல் நிறுவனம் – போன்றவை கடந்த கால செயற்பாடுகள் காரணமாக மிகவும் பின்தங்கிய மட்டத்தில் காணப்படுகின்றன. எனவே, இந்த நிறுவனங்களை விரைவாக இலாபம் ஈட்டக்கூடிய நிறுவனங்களாக கட்டியெழுப்ப வேண்டியத் தேவை இருக்கின்றது. அந்த வகையில் அதற்குரிய நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் இங்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்துடன், கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடித்துறை சார்ந்த அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிகளை எமது இளம் சமதாயத்தினரும் பயன்பெறக்கூடிய வகையில் மேலும் விரிவாகவும், பரவலாகவும் வழங்க வேண்டியத் தேவையும் இருக்கின்றது.

எனவே, இத் தேவைகள் அனைத்தையும் சம காலத்தில் விரைந்து பூர்த்தி செய்து கொள்வதற்காக கடுமையான முயற்சிகளை எமது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அந்த வகையில், அமைச்சு அலுவலகத்தில் மாத்திரம் அமர்ந்து கொண்டு தீர்மானங்களையும், முடிவுகளையும் எடுக்காமல்,  இத்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் நேரடியாகவே சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டும், கடற்றொழிலாளர்கள், நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடியும், அவர்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பெற்று வருகின்றேன்.

இத்தகைய கள விஜயங்கள் கடற்றொழில் மற்றும் றன்னீர் மீன்பிடித் துறைகளை மேலும் வலுமிக்கதாக முன்னேற்றுவதற்கு உறுதுணையான அனுபவங்களை எனக்குக் கொடுத்து வருவதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதுமட்டுமன்றி, இத்தகைய கள விஜயங்கள் இத் தொழிற்துறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும், அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒருவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றது. மாண்புமிகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் உள்ளிட்ட இந்த அரசாங்கம், எமது அமைச்சு இத்துறை சார்ந்து பாரிய மேம்பாடுகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை அவர்களிடையே தோற்றுவிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இந்த மூன்று மாத காலப் பகுதிக்குள் எமது மக்களின் நம்பிக்கைக்கு உரிய வகையிலான கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறை சார்ந்த நிலைபேறு அபிவிருத்திக்கான ஆரம்ப, அடிப்படை ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அடுத்து வருகின்ற காலங்களில் ஏனைய நடைமுறை செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்க உள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்ள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் 9 ஒழுங்குவிதிகள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts: