ஒலிம்பிக் போட்டிக்கான தீபச் சுடர் வியாழனன்று ஏற்றப்படும்!

பிரேசிலின் ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தீபச் சுடர் ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் அமைந்துள்ள ஹேரா பெண் கடவுளரின் கோவில் முன்றலில் வியாழக்கிழமை ஏற்றப்படவுள்ளது.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடை பெறவுள்ள 31 ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான பண்டைய ஒலிம்பிக் மற்றும் நவீன ஒலிம்பிக் ஆகியவற்றின் சம்பிராதயங்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வைபவத்தின்போது ஹேரா என்ற பெண் கடவுளரின் பாத்திரத்தை ஏற்கவுள்ள கிரேக்க நடிகை கெத்தரினா லேஹூ தீபச் சுடரை ஏற்றவுள்ளார்.
இந்தச் சுடர் சூரிய கதிர்களிலிருந்து பரளைய ஆடியைக் கொண்டு இயற்கையாக பற்றவைக்கப்படும். ஒலிம்பிக் தீபச் சுடரை கத்தரீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளும் கிரேக்க உடற்கலை சாகச உலக சம்பியன் லெவ்டெரிஸ் பெட்ரூனியாஸ் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை முதலாவது நபராக ஆரம்பத்து வைக்கவுள்ளார்.
கிரேக்கத்தில் ஆறு நாட்கள் வலம் வரும் ஒலிம்பிக் தீபச் சுடர் மெரதோனாஸ் நகர் உட்பட மிக முக்கிய நகரங்கள் வழியாக மொத்தம் 1இ388 மைல்கள் கொண்டு செல்லப்படவுள்ளன.
கிரேக்கத்தில் ஒலிம்பிக் தீபச் சுடரை ஏந்திச் செல்லும் 450 பேரில் சிரியா அகதி ஒருவரும் அடங்குகின்றார்.
ஏதென்ஸின் தென் பகுதியில் அமைந்துள்ள எலியோனாஸ் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் முகாமில் தஞ்சமடைந்துள்ள சிரியா அகதி ஒருவருக்கே தீபச் சுடரை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
நவீன ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் முதலாவது அத்தியாயம் 1896 இல் அரங்கேற்றப்பட்ட பனத்தினியாக்கோ விளையாட்டரங்கில் ஒலிம்பிக் தீபச் சுடர் ஓட்டம் நிறைவு பெறவுள்ளது.
அங்கு ஒலிம்பிக் தீபச் சுடர் இந்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடாத்தவுள்ள பிரேஸிலிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்படும்.நவீன ஒலிம்பிக் வரலாற்றில் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றப்பட்டு இவ் வருடம் 80 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதன் காரணமாக ஒலிம்பிக் சுடர் ஏற்றும் வைபவம் விசேடத்துவம் பெற்றுள்ளது.
ஒலிம்பிக் தீபச் சுடர் முதன் முதலில் பேர்லின் 1936 ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவை முன்னிட்டு ஏற்றப்பட்டு தொடர் ஓட்டமாக கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|