உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் வெளிவரும் உண்மைகள்!

Saturday, May 23rd, 2020

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு குறித்த தாக்குதலுக்கு இலக்கான விருந்தகங்களின் அதிகாரிகள் சிலர் இன்றை தினம் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக சில பகுதிகளிலுள்ள மேலும் சிலரும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏப்ரல் 21 தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் இலங்கையில் தயாரிக்கப்பட்டவை எனவும் , குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான காவற்துறை பரிசோதகர் ஏ.ஜி.வை சுவர்ணகீர்த்தி சிங்ஹ நேற்றைய தினம் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் 21 பயங்கர தாக்குதலுக்கு இலக்கான கிங்ஸ்பரி விருந்தகம் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான காவற்துறை பரிசோதகர் ஏ.ஜி.வை சுவர்ணகீர்த்தி சிங்ஹ முன்னெடுத்துள்ளார்.

இதனடிப்படையிலேயே அவரிடம் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று , சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களின் பிரகாரமே குறித்த தாக்குதல் தொடர்பில் தான் அறிந்துக் கொண்டதாகவும் அவர் நேற்றைய தினம் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பணிப்புரைக்கு அமைய குறித்த தாக்குதல் இடம்பெற்ற ஸ்தலத்திற்கு நேரில் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கிங்ஸ்பரி விருந்தகத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான காவற்துறை பரிசோதகர் ஏ.ஜி.வை சுவர்ணகீர்த்தி சிங்ஹ ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.

சினமன் கிரேன்ட் விருந்தகத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரி , கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி கிங்ஸ்பரி விருந்தகத்தில் அறையொன்றை முற்பதிவு செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தற்கொலைதாரி கிங்ஸ்பரி விருந்தகத்தின் 20 ஆவது தளத்தில் அமைந்துள்ள 819 ஆவது அறையில் தங்கியிருந்தாகவும் , அது தொடர்பிலான சி.சி.டி.வி காட்சிகள் அடங்கிய ஆவணத்தினையும் அவர் ஆணைக்குழுவில் நேற்று சமர்ப்பித்துள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி குறித்த தற்கொலைதாரி ,தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்களை கொண்டு சென்ற காட்சிகளும் அந்த சி.சி.டி.வி காணொளியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமின் சாரதியாக குறித்த தற்கொலைதாரி பல தடவைகள் செயற்பட்டுள்ளதாக ஏ.ஜி.வை சுவர்ணகீர்த்தி சிங்ஹ ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.

அத்துடன் குறித்த தாக்குதல்தாரி , கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி காத்தாண்குடி பிரதேசத்தில் உந்துருளியொன்றை வெடிக்க வைத்த சம்பவத்துடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான காவற்துறை பரிசோதகர் ஏ.ஜி.வை சுவர்ணகீர்த்தி சிங்ஹ ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: