|
| | 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்! |
|
| | 08.09.2010 - புதன்கிழமை
18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அரசமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டு 144 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க இச்சட்டமூலம் மீதான விவாதத்திலோ - வாக்களிப்பிலோ பங்கேற்கவில்லை.
|
|
|
| | சிறி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவம் |
|
| | 08.09.2010 - புதன்கிழமை
வடமராட்சி அருள்மிகு சிறி வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று 8ஆம் திகதி புதன்கிழமை பகல் 10.00 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பாகிறது.
17 தினங்கள் இடம்பெறும் இம் மகோற்சவம் 21ம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை சப்பரத் திருவிழாவும் 22ஆம் தேர்திருவிழாவும் 23 ஆம் திகதி சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் 24 ஆம் திகதி கேணித் தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று மகோற்சவம் நிறைவு பெறும்.
|
|
|
| | மீன்பிடிப் பயிற்சிக் கல்லூரிக்கு 25 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டடம் |
|
| | 08.09.2010 - புதன்கிழமை
யாழ்ப்பாணத்திலுள்ள மீன்பிடிப் பயிற்சிக் கல்லூரிக்கு 25 மில்லியன் ரூபா செலவில் புதிய நிரந்தரக் கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பானியத் தொண்டு நிறுவனமான ஜெய்க்கா வழங்கவுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள கடலோட்டு இயந்திரவியல் கல்லூரியில் முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கும் வகையில் கடலியல் வளாகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது என ஜெய்க்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இக்கடலியல் வளாகம் அமைக்கப்படுவதன் மூலம் சிறுதீவினை அண்டிய கடற்பகுதிகளில் உள்ள பாசி கண்டல் தாவரங்களைப் பாதுகாக்கவும் அருகிவரும் உயிரினங்களான கடலட்டை முதலான கடல்வாழ் உயிரினங்களைப் பேணவும் முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
|
|
|
| | கொக்கொட்டிச் சோலைப் பிரதேசத்தில் பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு |
|
| | 08.09.2010 - புதன்கிழமை
கொக்கொட்டிச் சோலைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கிறனைட் குண்டுகள் 5 எஸ்.எல்.ஆர்.தோட்டாக்கள் 306 20 கிலோ நிறை கொண்ட குண்டு 1 பயிற்சித் தோட்டாக்கள் 29 மோட்டரோலா செட் 1 ஆகிய ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
|
|
|
| | வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது நோக்கம் - ஜனாதிபதி |
|
| | 08.09.2010 - புதன்கிழமை
நாட்டை சுதந்திரமாக்கிய எமக்கு நாட்டு மக்கள் திருப்திப்படும் வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பது முக்கியமாகவுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் வீட்டு உறுதிப் பத்திர மில்லாத 1300 பேருக்கு வீட்டு உறுதிகளை வழங்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வீட்டுரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரத்தைக் கையளித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது
சிலர் இந்த நாட்டில் ஜனநாயகமில்லை எனவும் சர்வாதிகாரமே ஓங்கியுள்ளதெனவும் கூறி வருகின்றனர். இது பொறாமை மற்றும் வைராக்கியத்தின் வெளிப்பாடாகும். என்னைப் பற்றி மிக மோசமான கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. எனது குடும்பத்தை சீர்குலைக்கும் விதத்திலும் கூற்றுக்களை வெளியிட்டுள்ளனர். நான் கொழும்பு 7ல் பிறந்தவனென்றால் இதன் பிரதிபலிப்பு வேறு விதமாக இருந்திருக்கும். நான் மெதமுலன கிராமத்தில் பிறந்தவன். எனது செயற்பாட்டை சீரழிக்க முயற்சிக்கின்றனர்.
நாம் மக்களுக்காக நாட்டின் எதிர்கால சந்ததிக்காக சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தை முன்னெடுத்துள்ளோம். அதனை நிறைவேற்றுவோம். அதற்கு சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம். வீட்டு உறுதிப்பத்திரிமில்லாதவர்களுக்கு வீட்டுரிமைப்பத்திரம் இன்று வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது நோக்கம். எனினும் அதனை ஒரே தடவையில் நிறைவேற்ற முடியாது. படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகின்றோம். வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சானது மக்களுடன் நெருங்கியதாக இத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சுலபமான காரியமல்ல. எனினும் முடிந்தளவு அதற்குத் தீர்வுகாண செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எமக்கான காணிகள் அதிகரிக்காது எனினும் வீட்டுத் தேவையும் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. அதனால் நாம் திட்டமிட்ட செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம்.
நாம் இன்றைய தினத்தை மட்டும் கருத்திற்கொள்ளாது எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டே செயற்படுகிறோம். தற்போது நாடு ஒன்றிணைக்கப்பட்டு அபிவிருத்திப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது. எதிர்கால பொருளாதாரம் சூழல் சமூக வளர்ச்சி பற்றி சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. இன்றேல் மோசமான பின்விளைவுகளையே எதிர்கொள்ள நேரும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
|
|
|
| | சட்டவிரோத மின் பாவனையில் ஈடுப்பட்டவர்களுக்கு 28 இலட்சம் ரூபா அபராதம் |
|
| | 08.09.2010 - புதன்கிழமை
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மின் பாவனையில் ஈடுபட்ட 136 பேருக்கு 28 இலட்சம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் நேற்று திங்கட்கிழமை அபராதத்தை விதித்தார்.
இலங்கை மின்சார சபையின் கொழும்பு அதிகாரிகளும் மட்டக்களப்பு உத்தியோகத்தவர்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
|
|
|
| | கடந்த 8 மாதங்களில் டெங்குக் காய்ச்சலினால் 208 பேர் பலி |
|
| | 08.09.2010 - புதன்கிழமை
இலங்கையில் கடந்த 8 மாதங்களில் டெங்குக் காய்ச்சலினால் 208 பேர் பலியாகியுள்ளனர். 28 ஆயிரத்து 955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
கொழும்பில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 52 பேர் பலியாகியுள்ளதோடு 4965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா, இரத்தினபுரி யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் டெங்கு நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
|
|
|
| | நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது! |
|
| | 07.09.2010 - செவ்வாய்க்கிழமை
வரலாற்று புகழ்மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் உற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றைய தினம் (7) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஓசையுடன் தேர்த் திருவிழா நடைபெற்றது.
இன்று அதிகாலை தொடங்கிய நித்திய பூஜை வசந்தமண்டப பூஜைகளைத் தொடர்ந்து காலை 7.15 மணிக்கு முருகப்பெருமான் தங்கத் தேரில் எழுந்தருளி வந்து அடியவர்களுக்கு அருட்காட்சி கொடுத்து 9.25 மணியளவில் தேர் முட்டியை வந்தடைந்தது.
இம்முறை வெளிநாடுகளில் இருந்தும் தென்னிலங்கையில் இருந்தும் மன்னார் வவுனியா திருகோணமலை போன்ற பிற மாவட்டங்களிலிருந்தும் சுமார் இரண்டு இலட்சம் பக்தர்கள் பங்குபற்றினர்.
எனவே பக்தர்களுக்குரிய வசதிகளைப் பொலிஸாரும் மாநகர சபையினரும் மேற்கொண்டிருந்தனர். மக்களுக்கு வேண்டிய சுகாதார குடிதண்ணீர் வசதிகள் போன்றவற்றை யாழ். மாநகரசபையும் மற்றும் ஆலயச் சூழலில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காகவும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் சுமார் 600 பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கும் மேலாக பரியோவான் முதலுதவிப் படையினர் சாரணர்கள் மற்றும் தொண்டர் படையினரும் சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முருகபெருமானின் தீர்த்தத் திருவிழா நாளை தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | முன்னேறுவதற்கான வழிவகைகளை நாம் வகுத்து செயற்பட வேண்டும் - ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளர்..! |
|
| | 07.09.2010 - செவ்வாய்க்கிழமை
நாம் எதிர்கொண்ட அவலங்களைப் பேசிக் கொண்டிருக்காமல் நிஜத்தை அறிந்து கொண்டு அதனை சவாலாக ஏற்று முன்னேறுவதற்கான வழிவகைகளை நாம் வகுத்து செயற்பட வேண்டும். அதனூடாகவே புதிய உத்வேகத்தை நாம் எட்டமுடியும் என ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தொண்டமானாறு கெருடாவில் விவேகானந்தா சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்ட விவேகானந்தா முன்பள்ளி விளையாட்டு விழா நிலையத் தலைவர் திரு மு.இரத்தினம் தலைமையில் இடம்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் முன்பள்ளி விளையாட்டுப் போட்டியை நடாத்திக் கொண்டிருக்கும் நாம் மழலைகளின் கல்வியில் பெற்றோர் கூடிய கவனம் செலுத்தாமல் தவறிழைத்து விட்டு வளங்கள் போதியளவு இன்மையால் தமது மழலைகளின் கல்வியில் முன்னேற்றம் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றோம். கடந்த 2001ம் ஆண்டு எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வளங்கள் குறைந்த வசதிகள் குறைந்த பல நிலையங்களை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தியதன் பெறுபேறாகவே இந்த விவேகானந்தா சனசமூக நிலையம் தனக்கென ஒரு நிலையத்தை அமைத்துக் கொண்டது. அமைச்சர் அவர்கள் கிராமங்கள் வளர்ச்சியடைய வேண்டும். கல்வியில் கிராமங்கள் உயர்வடைய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நிதிகளை வழங்கினார். ஆனால் இன்று எமது இளைஞர்களின் பங்களிப்புக்கள் குறைவாகவுள்ளதாக ஆதங்கப்படுகின்றனர். அதற்கு மக்கள் எதிர்கொண்ட அவலங்களைக் காரணம் காட்ட முயல்கின்றனர். எனவே அவலங்களைப் பேசிக் கொண்டிருக்காமல் நிஜத்தை அறிந்து கொண்டு அதனை சவாலாக ஏற்று முன்னேறுவதற்கான வழிவகைகளை நாம் வகுத்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேசசபையின் செயலாளர் திரு.ச.சந்திரயோகன் அல்வாய் வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலைவன் பாடசாலை அதிபர் திரு து.இராஜதுரை கெருடாவில் தெற்கு கிராமசேவகர் திரு வே.வன்னிமரம் சமுர்த்தி உத்தியோகத்தர் அ.வதனராசா அச்சுவேலி தெற்கு கிராமசேவையாளர் பு.சாந்தகுமார் பருத்தித்துறை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொதுமுகாமையாளர் வே.பரமானந்தம் ஆசிரியர் சு.குணேஸ்வரன் புத்தூர் சோமஸ்கந்தா அதிபர் கு.இரவீந்திரன் சமாதான நீதிவானும் இலங்கைப் போக்குவரத்துச்சபை பருத்தித்துறைச்சாலைத் திடீர் பரிசோதகர் கி.அருமைத்துரை மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நன்றியுரையினை விவேகானந்தா சனசமூக நிலையச் செயலாளர் திருமதி யோகேஸ்வரி ஜெகதாஸ் வழங்கினார்.
|
|
|
| | கதிர்காமம் பாத யாத்திரை நூல் வெளியீடு |
|
| | 07.09.2010 - செவ்வாய்க்கிழமை
யாழ் நல்லூர் ஆலய முன்றலில் நேற்றைய தினம் (6) கதிர்காமம் பாத யாத்திரை நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
இவ்வைபவத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சார்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் அவர்கள் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில்
பக்தி யாத்திரையாக அமைந்த கதிர்காமம் பாத யாத்திரை அனுபவங்களை நூல் வடிவில் தொகுத்து வெளிக் கொணர்வது பயனுள்ள ஒரு செயற்பாடாகும். இப்பணியில் ஈடுபட்ட நூலாசிரியர் செந்தூராசா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இத்தகைய பணிகள் மென்மேலும் வளர்ந்து மக்கள் மனங்களில் நற்பண்புகளை விதைக்க வேண்டும் என்றும் கமல் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த நூலாசிரியர் செந்தூராசா கதிர்காமம் பாத யாத்திரையின் அனுபவங்களையும் நாங்கள் கண்ட அதிசயங்களையும் அற்புதங்களையும் இயன்ற வரையில் எளிமையாக தொகுத்துத் தந்திருப்பதாகவும் எதிர்காலத்தில் கதிர்காமக் கந்தனைத் தரிசிக்கப் பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இந்நூல் விளங்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நல்லை அதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமார்சார்ய சுவாமிகள் வட இந்தியா ரிஷிகேசம் சுவாமி நித்தியானந்தா யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சண்முகலிங்கன் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
|
|
|
| | இவ்வருடத்தில் மேலும் 500 பஸ்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி |
|
| | 07.09.2010 - செவ்வாய்க்கிழமை
இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்த வருடத்தில் மேலும் 500 பஸ்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இ.போ.ச தலைவர் எம். டி. பந்துசேன தெரிவித்துள்ளார்.
இதில் முதற் கட்டமாக நூறு பஸ்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து தவணை அடிப்படையில் பணம் செலுத்தி பஸ்களை கொள்வனவு செய்யவுள்ளதாக கூறிய அவர் அதிக வருமானம் ஈட்டக் கூடிய வீதிகளில் அவற்றை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை டிப்போக்களில் திருத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ள பஸ்களை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் திட்டமொன்று போக்குவரத்து அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 25 பஸ்கள் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
|
|
|
| | முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியவர்களின் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை தபாலில் அனுப்ப தீர்மானம் |
|
| | 07.09.2010 - செவ்வாய்க்கிழமை
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான பிறப்பு இறப்பு விவாக சான்றிதழ்களை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தபால் மூலம் அனுப்பத் தீர்மானித்துள்ளதாக பதிவாளர் நாயகம் ஈ. எம். குணசேகர தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 5650 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள துடன் அது தொடர்பான நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர் இரண்டு வாரங்களுக்குள் பிறப்பு இறப்பு விவாக சான்றிதழ்களை தபாலில் அனுப்பிவைக்கத் தீர்மானித் துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சும் பதிவாளர் நாயகம் திணைக்களமும் அண்மையில் முல்லைதீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற பிரதேசமான முள்ளியவளை ஒட்டுசுட்டான் பகுதிகளில் மக்கள் நடமாடும் மக்கள் சேவை நிகழ்வுகளை நடத்தின.
இதன்போது முள்ளியவளையிலிருந்து 3750 பிறப்பு இறப்பு விவாகச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பமும் ஒட்டுசுட்டானிலிருந்து 1900 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.
அத்துடன் அதே தினங்களில் 487 விண்ணப்பங்களுக்கான சான்றிதழ்கள் உடனடியாகவே வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் தெரிவித்த பதிவாளர் நாயகம் மேற்படி நடமாடும் சேவை நிகழ்வுகள் சாத்தியமானதாக நடைபெற்றதாகவும் கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களுக்கு ஏற்ப இரு வார காலத்தில் சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் மீள்குடியேற்றப் பிரதேசங்களை இலக்காகக் கொண்டு நடமாடும் மக்கள் சேவைகள் நடந்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
|
|
|
| | கோஷ்டி மோதலில் தப்பி ஓடிய இரு மாணவர்கள் ரயிலில் மோதி மரணம் |
|
| | 07.09.2010 - செவ்வாய்க்கிழமை
கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கும் வெளியாருக்குமிடையில் ஏற்பட்ட தகராறின் போது சிதறி ஓடிய இரு மாணவர்கள் ரயிலில் மோதி இறந்துள்ளனர்.
தொழில் நுட்ப நிறுவனத்தில் நடைபெறவுள்ள கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களை வெளியில் இருந்து வந்த 15 பேர் கொண்ட குழு தாக்கியுள்ளது.
இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்களும் வெளியார் மூவரும் காயமடைந்து நீர்கொழும்பு ஆஸ்த்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மோதலின் போது சிதறி ஓடிய கேகாலை மற்றும் கெகிராவையைச் சேர்ந்த இரு மாணவர்களே விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை சட்டவிரோதமாக தொழில்நுட்ப நிறுவனத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
|
|
| | எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் நிறுவப்படவுள்ளது - எஸ்.பி. திஸாநாயக்க |
|
| | 07.09.2010 - செவ்வாய்க்கிழமை
எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் நோக்கில் முதற்கட்டமாக எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் நிறுவப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்கு அதிக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
| | இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் மீது தாக்குதல்! |
|
| | 07.09.2010 - செவ்வாய்க்கிழமை
இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதம நீதவான் உதேஷ் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான உதவி ஆணையாளரான எச்.எம். டென்ஸில் அவரைத் தாக்கியவர்களை அடையாளம் காண்பதற்காக அடையாள அணிவகுப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக நீதிமன்றத்திற்கு ஆஜராகவில்லை.
இதனையடுத்தே இந்தச் சந்தேக நபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
|
|
|
| | மாவடிப்பள்ளி ஆற்றில் முதலைகளின் அட்டகாசம் அதிகரிப்பு |
|
| | 07.09.2010 - செவ்வாய்க்கிழமை
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் முதலைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் மாவடிப்பள்ளி ஆற்றின் பைன்கட் எனுமிடத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நற்பிட்டிமுனையைச் சேர்ந்த 26 வயதான நபர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
| | யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபர்கள் மாநாடு |
|
| | 06.09.2010 - திங்கட்கிழமை
யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளையும் அரச அதிபர்களுக்கான மாநாடு நடைபெறவுள்ளது.
அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையில் நடைபெறும் இதில் பிரதியமைச்சர் டிலான் பெரேரா மற்றும் அமைச்சின் செயலாளர்களும் கலந்து கொள்வர்.
இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அரச அதிபர்களுக்கான மாநாடு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
|
|
|
|
| | 06.09.2010 - திங்கட்கிழமை
இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் நாட்டிலுள்ள அரசாங்க தமிழ் சிங்கள பாடசாலைகள் யாவும் நாளை 07 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 13 ஆம் திகதியே ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன அறிவித்துள்ளார்.
இதேவேளை க.பொ.த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் இம்மாதம் 13 ஆம் திகதியே திறக்கப்படும்.
|
|
|
| | பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்த குடும்பஸ்தர் உயிரிழப்பு |
|
| | 06.09.2010 - திங்கட்கிழமை
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸின் மிதிபலகையில் நின்று பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் கால் தடக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நுணாவில் மேற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த நமசிவாயம் இராசரட்ணம் (வயது-58) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
நுணாவில் அறவெளி சனசமூக நிலையத்திற்கு முன் குறித்த பஸ்ஸில் பயணித்த மற்று மொரு பயணி இறங்கிய பின் குறித்த நபர் மீண்டும் பஸ்ஸில் ஏறுகையிலேயே கால் தடக்கி விழுந்து படுகாயமடைந்தார்.
அவர் தலையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
|
|
|
| | மாடியிலிருந்து குதித்து வயோதிப பெண் தற்கொலை |
|
| | 06.09.2010 - திங்கட்கிழமை
வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து 61 வயதான தமிழ் வயோதிப பெண் ஒருவர் கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் செல்வரட்ணம் செல்வராணி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலும் கூறுகையில் வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கையிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றின் 6 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்தே மேற்படி பெண் தற்கொலை செய்துள்ளார். அத்துடன் அவர் தமிழில் கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துள்ளார்.
தனக்கு பார்வைக்கோளாறு உட்பட பல நோய்கள் இருப்பதாகவும் அதனால் தான் தனது குடும்பத்திற்குப் பாராமாக இருக்க விரும்பாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதத்தில் எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
|
|