Home English Tamil
     
   
 
 பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்    
 

22.08.2008 - சனிக்கிழமை

பாகிஸ்தானில் இராணுவ தளவாட தொழிற்சாலை அருகில்  பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலைத் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லகம பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியொன்றில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அமைதியையும் அரசியல் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் அரசும் அதன் மக்களும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம்; பூரண ஒத்துழைப்பு வழங்கும்.

பயஙகரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு இலங்கை அரசின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அச்செய்தியில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள வாவில் என்னும் இடத்தில் 15க்கும் மேற்பட்ட இராணுவ தளவாட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். வெடிமருந்துகள், பீரங்கிகள் போன்ற இராணுவ தளவாடங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

வேலை முடிந்த தொழிலாளர்கள் வீடுகளுக்குச் செல்வதற்காக தொழிற்சாலைக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தபோது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 50 தொழிலாளர்கள் ஸ்தலத்திலேயே உடல் சிதறிப் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.