22.08.2008 - வெள்ளிக்கிழமை
பல்கலைக்கழக மாணவர்கள் சமூக அநீதிகளை அகற்றி மனித உரிமைகளைப் பேணவும் தனிமனித சுதந்திரத்தை மதிக்கவும் மௌனங்களை கலைந்து முன்வரவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். இன்று பகல் தம்மை சந்திப்பதற்காக திரண்டு வந்த கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றம் மற்றும் தமிழ் மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்ட அறைகூவலை அவர் விடுத்தார்.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சுப் பணிமனையில் இன்று பகல் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் மாணவர்கள் ஆற்றிய பங்களிப்பினை எடுத்துவிளக்கியதுடன் தற்போதைய காலகட்டத்தில் மாணவ சமுதாயம் எவ்வாறு புலித்தலைமையினால் பிழையான வழிக்கு இட்டுச் செல்லப்பட்டது என்பதுடன் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பலவந்தமான ஆட்சேர்ப்பு மற்றும் ஆயுத பயிற்சி இதனால் ஏற்படும் பாரிய பின்விளைவுகள் மற்றும் சமுதாய பின்னடைவுகளையும் தெரியப்படுத்தினார். தற்போது இடம்பெறும் அர்த்தமற்ற யுத்தத்தினால் கொல்லப்படும் ஒவ்வொரு பிள்ளைகளும் எமது தாய் பெற்ற பிள்ளைகள் என்ற உணர்வோடு இவற்றிற்கெதிராக ஒவ்வொருவரும் மௌனம் கலைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டும் எனவும் அறைகூவல் விடுத்தார்.
ஒரு தந்தைக்குரிய அக்கறையோடு தனது பிள்ளைகளுக்கு நல்ல வசதி வாய்ப்புக்களையும் உயர்கல்வியினையும் வழங்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் சாதாரண பொதுமக்களின் பிள்ளைகளை பலவந்தமாக பலி கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுடனான இச்சந்திப்பின்போது கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம், மாவட்ட ரீதியாக மாணவர்கள் மத்தியில் நடாத்தும் தமிழ் மொழிப் போட்டிகள் குறித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி நடாத்தவுள்ள கலைநிகழ்ச்சி வெற்றி பெறவும் முன்கூட்டிய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியம் ஊடாக கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றம் நடாத்தவுள்ள கலை நிகழ்ச்சிக்கு முதற்கட்ட நிதி உதவியினையும் கையளித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடனான கொழும்பு பல்கலைக்கழக மாணவ மாணவிகளுடனான இச்சந்திப்பில் சர்வதேச இந்துமதபீடத்தின் தலைவர் தேசபந்து சிவசிறி பாலரவிசங்கர சிவாச்சாரியாரும் செயலாளர் ராமச்சந்திர பாபு சர்மாவும் பங்குகொண்டு தமது ஆசிகளை வழங்கியதும் விஷேட அம்சமாகும். |