22.08.2008 - வெள்ளிக்கிழமை
வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இரு மாகாணங்களிலுமுள்ள நான்கு மாவட்டங்களிலும் 1772 வாக்களிப்பு நிலையங்களில் நாளை சனிக்கிழமை வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இரு மாகாண சபைகளுக்குமான வாக்களிப்பு நாளைய தினம் சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிவரை நடைபெறும். வாக்களிப்பிற்கு ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை நேரகாலத்துடன் அளிக்குமாறு தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விரு மாகாண சபைகளுக்கும் 73 உறுப்பினர்களை தெரிவு செய்யப்பட வேண்டிய நிலையில் 1698 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதற்கென நான்கு மாவட்டங்களிலிருந்தும் 21 இலட்சத்து 65 ஆயிரத்து 280 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெரும் கட்சிகளுக்கு இரு மாகாண சபைகளுக்கும் தலா இரண்டு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும். இரு மாகாண சபைகளுக்குமான தேர்தலில் 45 அரசியல் கட்சிகளும் 34 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்ற போதிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலேயே கடும் போட்டி நிலவி வருகின்றது.
73 உறுப்பினர்களில் 31 உறுப்பினர்கள் வடமத்திய மாகாண சபைக்கும் 42 உறுப்பினர்கள் சப்ரகமுவ மாகாண சபைக்கும் தெரிவு செய்யப்படவுள்ளனர். 31 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய வட மத்திய மாகாண சபைக்கு 21 உறுப்பினர்கள் அநுராதபுர மாவட்டத்திலிருந்தும், 10 உறுப்பினர்கள் பொலநறுவை மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ளனர். 42 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவேண்டிய சப்ரகமுவ மாகாண சபைக்கு இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 24 உறுப்பினர்களும் கேகாலை மாவட்டத்திலிருந்து 18 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். வட மத்திய மாகாண சபைக்கான தேர்தலில் வாக்களிப்பதற்கு 8 இலட்சத்து 46 ஆயிரத்து 454 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 5 இலட்சத்து 69 ஆயிரத்து 398 (5,69,398) பேர் அனுராதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 2 இலட்சத்து 77 ஆயிரத்து 56 பேரும் (2,77,056 ) பேர் பொலநறுவை மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை சப்ரகமுவ மாகாண சபைக்கான தேர்தலில் வாக்களிப்பதற்கு 13 இலட்சத்து 18 ஆயிரத்து 826 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 7 இலட்சத்து 13 ஆயிரத்து 205 பேர் (7,13,205) இரத்தினபுரி மாவட்டத்த சேர்ந்தவர்களாவார். 6இலட்சத்து 5 ஆயிரத்து 621 பேர் (6,05,621) கேகாலை மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். இரு மாகாண சபைக்களுக்கும் நான்கு மாவட்டங்களிலிருந்தும் மொத்தமாக 21 இலட்சத்து 65 ஆயிரத்து 280 பேர் (21,65,280) பேர் தகுதிபெற்றுள்ளனர்.
31 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவேண்டிய வடமத்திய மாகாண சபைக்காக 690 பேர் போட்டியிடுகின்றனர் இதில் அனுராதபுர மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளிலிருந்து 288 பேரும், 07 சுயேட்சை குழுக்களிலிருந்து 168 பேருமாக 456 பேரும் , பொலநறுவை மாவட்டத்தில் 10 அரசியல் கட்சிகளிலிருந்து 130 பேரும் ,08 சுயேட்சைக்குழுக்களிலிருந்து 104 பேருமாக மொத்தமாக 690 பேர் போட்டியிடுகின்றனர்.
42 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவேண்டிய சப்ரகமுவ மாகாண சபைக்கு 1008 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர் இதில் இரத்தினபுரி மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளிலிருந்து 324 பேரும், 09 சுயேட்சை குழுக்களிலிருந்து 243 பேருமாக 567 பேரும், கேகாலை மாவட்டத்தில் 11 அரசியல் கட்சிகளிலிருந்து 231 பேரும் ,10 சுயேட்சைக்குழுக்களிலிருந்து 210 பேருமாக மொத்தமாக 441பேருமாக மொத்தமான 1008 உறுப்பினர்களும் போட்டயிடுகின்றனர். வடமத்திய மாகாண சபையில் அனுராதபுர மாவட்டத்தில் 07 தொகுதிகளில் 527 வாக்களிப்பு நிலையங்களிலும், பொலநறுவை மாவட்டத்தில் 07 தொகுதிகளில் 231 வாக்களிப்பு நிலையங்களிலுமாக மொத்தமாக 758 வாக்களிப்பு நிலையங்களிலும். சப்ரகமுவ மாகாண சபையில் இரத்தினபுர மாவட்டத்தில் 08 தேர்தல் தொகுதிகளில் 541 வாக்களிப்பு நிலையங்களிலும் கேகாலை மாவட்டத்தில்09 தொகுதிகளில் 473 வாக்களிப்பு நிலையங்களிலும் மொத்தமாக 1772 வாக்களிப்புகள் நிலையங்களில் வாக்களிப்புகள் நடைபெறவுள்ளன.
இதேவேளை இரு மாகாண சபைத்தேர்தலுக்கான பணிகளில் 36 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் . அந்த அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் தங்களது கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வார்கள். கொழும்பிலிருந்தும் 2100 அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட உள்ளனர். அவர்கள் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் ஆலோசனை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்றும் பிரதி தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். |