21.08.2008 - வியாழன்
வன்னியிலுள்ள மக்களை இலகுவான வழியில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரவழைப்பதற்குரிய நடவடிக்கைளை அரசு முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சரும், வடமாகாணத்திற்கான விஷேட செயலணித் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வருமாறு இடம்பெயர்ந்த மக்களுக்குப் படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் சுலபமாக வருவதற்கேற்ற வகையில் வன்னிப் பகுதியில் மூன்று பாதைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களைத் தங்க வைக்கவும், உடனடி வசதிகளை வழங்குவதற்குமான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எவ்வளவு விரைவாக மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரவழைக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் மக்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வவுனியாவிற்கு வரும் பட்சத்தில் அவர்களைத் தங்க வைப்பதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் உடனடியாகச் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வவுனியாவிற்;கும் வரும் அகதிகளைத் தங்க வைப்பதற்கான இடங்களை நேற்றுப் பார்வையிட்ட அதிகாரிகள், அகதிகளைத் தங்க வைப்பதற்கான கொட்டகைகளை அமைப்பது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், நேற்று முன்தினம் வவுனியா அரசாங்க செயலகத்தில் அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஐ.நா.சபைப் பிரதிநிதிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும். |