
வடமாகாண விசேட செயலணித் தலைவரும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட சமூக மேம்பாட்டு பிரதிநிதி அக்ஸல் வெபர் தலைமையிலான பிரிதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
சமூக சேவைகள் அமைச்சுப் பணிமனையில் இன்று (21.08.2008) முற்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பில் வன்னிப் பெருநில மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவைகள் என்பவற்றுடன் வடக்கு கிழக்கு அபிவிருத்தி, சமூகசேவைகள் அமைச்சினூடாக முன்கொண்டு செல்லப்படும் மக்கள் மேம்பாட்டுத்திட்டங்கள் உட்பட பல விடயங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு எடுத்துவிளக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நாட்டு நிலைமைகள் குறித்து விளக்கமளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் அதேவேளை புலிகளின் பிரச்சினைகளுக்கு அவர்களின் பாசையிலேயே தீர்வு காணப்படவேண்டும் எனத்தெரிவித்தார். இதனடிப்படையில் கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு அங்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் வடக்கில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும் வரையிலும், வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யவும், யுத்தத்தால் சீரழிந்து போயுள்ள பிரதேசங்களை மீளவும் கட்டியமைத்து, புனரமைப்பு செய்து மக்களின் அன்றாட அவலங்களை துடைத்து, அவர்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அமைச்சரவை அங்கீகாரத்துடன் வடக்கு மக்களுக்கான சிறப்பு செயற்பாட்டுக் குழுவினை நியமனம் செய்து அதற்கு தன்னை தலைவராக நியமித்துள்ளமையினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்து விளக்கினார்.
தமிழ் பேசும் மக்களின் சார்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒர் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையில் தற்போது இடம்பெறும் அவலங்களில் இருந்து எமது மக்களை மீட்டெடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு தனக்குண்டு என்பதையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரியப்படுத்தினார்.
மேலும் சமூகசேவைகள் அமைச்சினூடாக சமூக அபிவிருத்தி மையங்களை ஏற்படுத்தி அதனூடாக மக்கள் நலத்திட்டங்களை முன்கொண்டு செல்லப்படும் திட்டங்களும், ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு எடுத்து விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உள்ளுரில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை பெருக்கக்கூடிய திட்டங்களை முன்கொண்டு செல்லக்கூடிய நிலைமையினை எடுத்து விளக்கியதுடன் இதற்கு சாதகமாக மன்னார் மாவட்டத்தில் கடற்றொழில் விவசாய வேளாண்மையுடன் வவுனியாவில் பாற்பண்ணை கோழிப்பண்ணை, விவசாய வேளாண்மை என்பற்றினூடாகவும் சுயதொழில் அபிவிருத்தி முன்னேற்றம் காணக்கூடிய விடயங்களும் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. மேலும் வடபகுதியில் பழப்பயிர்ச் செய்கையினை விஸ்தரிப்பதுடன் பழங்களை பதப்படுத்துதல் தொடர்பான திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டிய அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் சமூகசேவைகள் அமைச்சின் தொழிற்பயிற்சி பிரிவினூடாக மேற்கொள்ளப்படும் தொழிற்பயிற்சி நெறிகள் குறித்து தெரியப்படுத்தியதுடன் வெளியிணைப்பு இயந்திர திருத்தம் போன்ற தற்போதைய காலகட்டத்திற்கு அவசியமான தொழில் நெறிகளின் அவசியம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக கற்பகதருவாம் பனை வளம் குறித்து விரிவாக எடுத்துவிளக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உச்சி முதல் அடி வரை எவ்வாறு பனைமரம் பயன்படுகின்றது என்பதை எடுத்து விளக்கியதுடன் பனை வளத்தினை தமது ஜீவனோபாயமாக கணிசமான மக்கள் கொண்டுள்ளதையும் தெரியப்படுத்தினார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுடனான இச்சந்திப்பில் முக்கியமாக வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள பொதுமக்கள் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும்போது அம்மக்களுக்கு தேவையான சகல வாழ்வாதார உதவிகளையும் வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியானது போதுமான உதவிகளை வழங்கி உதவவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரியப்படுத்திய விடயங்களில் தமது கூடிய அக்கறையினை செலுத்திய ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் மேற்கண்ட விடங்கள் தொடர்பாக தமது அவதானங்களையும் செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் விஷேட சமூக மேம்பாட்டு பிரதிநிதி அக்ஸல் வெபர் உடனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதி டொக்டர் ஏ.குணதிலக்க, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி ஜெகராஜசிங்கம், திட்டமிடல் பணிப்பாளர் லால் ரட்ணவீர ஆகியோரும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
21.08.2008 - வியாழக்கிழமை
|