Home English Tamil
     
   
 
 வட மாகாண அபிவிருத்திக்கு ஜப்பான் நான்கு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
 06.03.2013 - புதன்கிழமை

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கென சுமார் நான்கு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஐக்கிய நாடுகள் மனித குடியிருப்பு நிறுவனத்தின் ஊடாக ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது.

வட மாகாணத்தில் மோதல்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் சமூக உட்கட்டமைப்பு புனர்நிர்மாணம் மற்றும் வசதிகளை ஏற்படுத்தும் செயற்திட்டத்திற்காக இந்நிதி வழங்கப்படுகின்றது. இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதொ ஹொபொ மற்றும் ஐக்கிய நாடுகள் மனித குடியிருப்பு நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய அலுவலகத்தின் சிரேஷ்;ட மனித குடியிருப்பு அலுவலர் யொசினொபு புகுசாவா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச, வட மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் கைச்சாத்திடப்பட்டது.

பழுதான அல்லது சிதைவடைந்த உள்ளக வீதி மீள்கட்டமைப்பு, நீர் வழங்கல் வசதிகள், பல்நோக்கு சமூக நிலையங்கள், மழை நீர் சேமிக்கும் வசதி போன்ற சிறிய சமூக உட்கட்டுமான புனர்நிர்மாணம் மற்றும் புனரமைப்பு, ஆரம்பக் கல்வி முன்னேற்றம்;, பெண்களை தலைமைத்துவம் மற்றும் தீர்மானம் எடுத்தலில் வளப்படுத்தல், சிறந்த சேவை வழங்குதலுக்கு சமூக அரசாங்க பங்காளிகளின் திறனை விருத்தி செய்தல், சமூகங்களிடையே உறவை மேம்படுத்தல், காலநிலை மற்றும் அனர்த்த மீளும் தன்மையை மேம்படுத்தல் போன்றனவே இந்த செயற்திட்டத்தின் பிரதான உள்ளடக்கங்களாகும்.

இந்த முன்முயற்சிகளின் மூலம் வட மாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களைச் சேர்ந்த 98,120 மீள்குடியேறிய மக்கள் பயனடைவர். இந்த செயற்றிட்டமானது ஐக்கிய நாடுகள் மனித குடியிருப்பு நிறுவனத்தால் சமூக மட்ட நிறுவனங்களின் பங்களிப்புடன் அடுத்த இரண்டாண்டு கால பகுதியில் அமுல்படுத்தப்படும்.

ஐக்கிய நாடுகள் மனித குடியிருப்பு நிறுவனத்தின் மக்கள் செய்முறை மாதிரியானது ஜப்பானிய அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படும் மனித பாதுகாப்பு எண்ணக்கருவிற்கு ஒத்திசைவாக உள்ளது என ஜப்பானிய தூதுவர் நொபுஹிதொ ஹொபொ தெரிவித்தார். இந்த அணுகுமுறை மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரவும் வட மாகாணத்தின் பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதற்குமான சூழலை சந்தேகமின்றி ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.





 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.