Home English Tamil
     
   
 
 நாட்டின் அனைத்து தரப்புக்களுக்கும் உரிய ஒரு வரவுசெலவுத்திட்டமாக காணப்படுகிறது. - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
 01.11.2014 - சனிக்கிழமை

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரை.

(உரையை முழுமையாக பார்க்க இங்கே அழுத்தவும்)


 இன்று முதல் ஒரே விலையில் நாடு முழுவதும் எரிபொருள்
 01.11.2014 - சனிக்கிழமை

கொழும்பு எரிபொருள் நிலையங்களில் டீசல், பெற்றோல் விற்கப்படும் விலைக்கு 50, 60 சதம் அதிகமாக வேறு பகுதிகளில் விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று (01) தொடக்கம் அந்த நடவடிக்கை நிறுத்தப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தொடக்கம் முழு இலங்கையிலும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரே விலைக்கு விற்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிறிசேன அமரசேகர தெரிவித்துள்ளார்.

வெளி மாவட்டங்களுக்கு எரிபொருள் எடுத்துச் செல்லப்படும் போக்குவரத்து செலவை ஈடுசெய்யவென வேறு மாவட்டங்களில் பெற்றோல் மற்றும் டீசல் கொழும்பிலும் பார்க்க அதிகமாக விற்கப்பட்டது. எனினும் இன்று தொடக்கம் போக்குவரத்து செலவை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்ளும் என சிறிசேன அமரசேகர குறிப்பிட்டார்.


 அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுபோகத்தில் 24,148 ஏக்கரில் நெற்செய்கை!
 01.11.2014 - சனிக்கிழமை

அநுராதபுரம் மாவட்டத்தில் நீர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் கடந்த சிறுபோகத்தின் போது 24,148 ஏக்கரில் மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்பட்டதாக அநுராதபுர வலய நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்தார்.

அநுராதபுரம் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட நுவரவௌ நீர்ப்பாசனத்தில் இருந்து 330 ஏக்கர், திஸாவௌ 432 ஏக்கர், நாச்சியதீவுவௌ 2400 ஏக்கர், அபயவௌ 2664 ஏக்கர், மஹ கனந்தராவௌ 1000 ஏக்கர், குரிவிலவௌ 1034 ஏக்கர் ஆக 8020 ஏக்கரில் மட்டுமே நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளது.

ராஜன்கனிய நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவில் ராஜன்கனியவௌ மற்றும் அவ்கமுவவௌ நீர்த்தேக்கத்திலிருந்து 14108 ஏக்கரில் நெற் செய்கை பண்ணப்பட்டது. {ஹருலுவௌ நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவில் மாணங்கட்டிய குளத்தில் இருந்து 1050 ஏக்கர் நெற் செய்கை பண்ணப்பட்டது.

அநுராதபுரம் நீர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் 62,762 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ள வசதி இருந்த போதிலும் எதிர்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சி இன்மையினால் 24,148 ஏக்கரில் மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்பட்டதாக அநுராதபுர வலய நீர்ப்பாசனப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


 சிவனொளிபாதமலை வழிபாடுகள் டிசெம்பர் 06 இல் ஆரம்பம்!
 01.11.2014 - சனிக்கிழமை

சிவனொளிபாதமலை வழிபாட்டுக்கு செல்வதற்கான நாள் எதிர்வரும் டிசெம்பர் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

திருவுருவம் மற்றும் திருஆபரணங்கள் அடங்கிய ஊர்வலம் டிசெம்பர் 05 ஆம் திகதி வெல்மடுல்ல கல்பொத்தாவல ரஜமஹா விகாரையில் ஆரம்பமாகும்.

நல்லதண்ணியில் நிறைவுறும் இந்த ஊர்வலத்தின் பின்னர் குறித்த திருவுருவம் மற்றும் ஆபரணங்கள் நாட்டை காப்பாற்றிய இராணுவ உறுப்பினர்களால் கால்நடையாக வழிபாட்டிடத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 இரண்டாம் வாசிப்பு மீதான வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பு இன்று
 01.11.2014 - சனிக்கிழமை

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் (01) இடம்பெறும்.

வரவு செலவுத் திட்டம் கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 7 நாள் விவாதத்தின் பின்னர் இன்று வாக்கெடுப்பு இடம்பெறுகிறது. பாராளுமன்றத்துக்கு கட்டாயம் சமூகமளிக்குமாறு சகல ஆளும் தரப்பு எம்.பி.க்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. குழுநிலை விவாதம் திங்கட்கிழமை ஆரம்பமாகும்.


 அநாதரவான 75 சிறுவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது
 01.11.2014 - சனிக்கிழமை

மீரியபெத்த மண்சரிவு காரணமாக தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள் எக்காரணம் கொண்டும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.

அந்தப் பிள்ளைகளின் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது பெற்ற அனுபவத்தைக் கொண்டே இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை கணக்கெடுப்பின்படி 75 பிள்ளைகள் தாயையும் தந்தையையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர். இவர்களது உறவினர்கள் என்று சொல்வோரும், நெருங்கிய உறவினர்கள் என்று சொல்வோரும் இந்தப் பிள்ளைகளை கேட்கின்றனர். எனினும் அவர்களிடம் இப்பிள்ளைகளை ஒப்படைக்கப்படமாட்டார்கள்.

75 பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு தங்குமிட வசதிகள் உள்ளிட்ட எதிர்காலம் அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பேற்கும். எவரது அனுசரணையையும் பெற்றுக் கொடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. எனினும் இந்தப் பிள்ளைகளுக்காக உதவி வழங்க விரும்புகிறவர்கள் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.


 குளியாப்பிட்டி விபத்தில் ஒருவர் பலி
 01.11.2014 - சனிக்கிழமை

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிபொல பிரதேசத்திலிருந்து குளியாப்பிட்டி நோக்கிய பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை மீறி பாதையிலிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்து வெள்ளிக்கிழமை (31) இரவு 10.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் வண்டியின் சாரதி, குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யாகரவத்த, கிதலவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஜயசிங்க ஆராச்சி ரோஹண விஜித்த  குமார என்பவே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 தொடரும் மழை குருநாகல் - கண்டி வீதியில் மண்சரிவு அபாயம்
 01.11.2014 - சனிக்கிழமை

தொடரும் மழை காரணமாக குருநாகல் - கண்டி வீதியில் மண் சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால் வாகன சாரதிகள் அவதானமாக பயணிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் - கண்டி வீதியில் மாவத்தகமவுக்கு அடுத்துள்ள கண்டி வீதியில் மண்மேடுகள் பெருமளவு காணப்படுதால் மண்சரிவுக்கான அபாயம் இருப்பதாக புவியியல் சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தின் மலைப் பிரதேசங்கள் பலவற்றில் உள்ள வீடுகளில் உள்ளோரும் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


 யுத்தத்திற்கு முடிவு கண்டதைப்போல், தமிழ் பேசும் மக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வைக்காண வழியை ஏற்படுத்தியதுபோல், தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே தீர்வைக்காண வேண்டும். தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே ஈ.பி.டி.பி ஆதரவு.
 31.10.2014

எமது மக்களின் சார்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையுடன், நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே ஆதரவு வழங்குவதென ஈ.பி.டி.பி. முடிவு செய்துள்ளது.

நேற்றைய தினம் (30.10.2014) மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளடங்கிய குழுவினர் அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலின்போது, இலங்கை மக்கள் அனைவரும் வெறுத்த அழிவு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஜனாதிபதியாகிய உங்களினாலேயே தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கும் கௌரவமான தீர்வொன்றைப் பெற்றுத் தரமுடியும் என்றும்
 
யுத்தத்துக்குப் பின்னர் அழிந்த எமது மாகாணம் பல்வேறு அபிவிருத்தி முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. அச்சமற்ற சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சமின்றி மூவின மக்களும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் எந்தவேளையிலும் சென்றுவரமுடியுமான சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி கூறுகின்றோம்.

அதேவேளை, எமது மக்களின் முக்கிய கோரிக்கைகளான, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு வலயமாக தடுக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலங்களை தேசிய பாதுகாப்புக்குத் தேவையான பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசத்து நிலத்தை உரியவர்களிடமே வழங்கவேண்டும்.

சிறைகளில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் ஆகியோரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும்.

ஐம்பதாயிரம் இந்திய வீட்டுத்திட்டத்துக்கும் மேலதிகமாக சொந்த வீடற்ற அனைவருக்கும் வீடுகள் கிடைக்க மேலும் ஒரு இலட்சம் வீடுகளை அமைத்துத் தரவேண்டும்.

வடமாகாண மாவட்டங்களின் குறிப்பாக கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களின் குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட ஆவண செய்யவேண்டும்.

ஓமந்தை சோதனைச் சாவடியில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எமது மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் நெருக்கடிகளுக்கு இடமில்லாமல் சுதந்திரமாக பயணிக்க ஆவண செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கும் எமது மக்களுக்கும் உண்டு.

ஆகவே அடுத்த தேர்தலிலும் நீங்களே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். கடந்த காலத் தவறுகளை மனதில் திருத்தி எமது மக்கள் தமது ஆதரவையும் உங்களுக்கே வழங்குவார்கள் என்றும் ஈ.பி.டி.பினராகிய நாம் எடுத்துக் கூறியுள்ளோம்.


 த.தே.கூட்டமைப்பின் வசமுள்ள காரைநகர் பிரதேச சபையில் மோதல் பணியாளர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு
 31.10.2014 - வெள்ளிக்கிழமை

காரைநகர் பிரதேச சபையின் தலைவருக்கும் செயலாளருக்கும் இடையில் பல மாதங்களாக இடம்பெற்று வரும் முரண்பாடுகளாலும் கூச்சல் காரணமாக தாங்கள் பணியினை மேற்கொள்ள முடியாதுள்ளதாக உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை நேற்று முதல் மேற்கொண்டுள்ளனர்.

பல மாத காலமாக காரைநகர் பிரதேச சபையின் தலைவர் ஆனைமுகன் செயலாளர் கேதீஸ்வரிக்கும் இடையில் இடம்பெற்றுவரும் தொடர் முரண்பாடுகள் மற்றும் அலுவலகத்தில் இடம்பெறும் கூச்சல் காரணமாக தங்களால் பணி செய்ய முடியவில்லை.

எனவே அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என 31 பேர் நேற்று முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 மண்சரிவினால் வீடுகளையிழந்த கொஸ்லாந்த மக்களுக்கு ஜனசெவன வீடுகள்
 31.10.2014 - வெள்ளிக்கிழமை

பதுளை ஹல்துமுல்ல, கொஸ்லந்த - மீரியாவத்த பிரதேசத்தில் மண்சரிவினால் வீடுகள்  இழந்தவர்களுக்கு ஜனசெவன தேசிய வீடமைப்புத் திட்டத்தினூடாக வீடுகள் நிர்மாணித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அவர்களது முன்னைய வீடுகள் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து பார்க்குமாறு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பிரதான காரியாலயத்திற்கும், தேசிய வீடமைப்பு சபையின் பதுளை மாவட்ட காரியாலய அதிகாரிகளுக்கும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த குடும்பங்கள் தற்காலிகமாக தங்கியுள்ள இடங்கள் குறித்தும் ஆராயுமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த மண்சரிவினால் முற்றாக சேதமடைந்த 70 லயன்வீடுகள், 03 தனிவீடுகள், பிரஜாசாலை, பாலர்பாடசாலை, வணக்கஸ்தலங்கள், உட்பட பல பொது வசதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன.


 இடுப்புப்பட்டியில் தங்கம் ஒருவர் கைது
 31.10.2014 - வெள்ளிக்கிழமை

ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு கிலோகிராம் நிறைகொண்ட 20 தங்கக் கட்டிகளை, இடுப்புப் பட்டியில் மறைத்து கடத்த முயன்ற ஒருவரை கைது செய்துள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

டுபாயிலிருந்து இலங்கை வந்த யு.எல் 226 விமானத்தில் பயணித்த பயணியிடமிருந்தே இரண்டு கிலோகிராம் நிறை கொண்ட தங்கக் கட்டிகள் 20 கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பைச் சேர்ந்த முஹம்மத் கபீர் முஹம்மத் சமீர் என்பவரே கைது செய்ப்பட்டவராவார்.

போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,  சந்தேக நபரை சோதனை செய்த போது அவர் அணிந்திருந்த இடுப்புப் பட்டியில் (பெல்ட்) சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்புத் தடை நீக்கம்
 31.10.2014 - வெள்ளிக்கிழமை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்த தடைநீக்கம் நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பல்கலைக்கழக பதில் துணை வேந்தர் பேராசிரியர் உதய ரத்னாயக்க குறிப்பிட்டார்.

விடுதியில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக அங்கு சென்ற அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மேலும் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் துணைவேந்தர் கூறினார்.

இந்த மாணவர்கள் நால்வரும் மேன்முறையீடுகளை சமர்ப்பித்துள்ளதாகவும், அவற்றை மேன்முறையீட்டுக் குழுவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பதில் துணைவேந்தர் உதய ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.


 கந்தர்மடம் வீதி புனரமைப்பு தொடர்பில் ஆராய்வு
 31.10.2014 - வெள்ளிக்கிழமை

மணல்தறை லேன், கந்தர்மடம் வீதி புனரமைப்பு தொடர்பில் ஆராயும் முகமாக நேரில் ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச இணைப்பாளரும், நல்லூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான அம்பலம் ரவீந்திரதாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

வீதிப்புனரமைப்பு தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

இதன்போது நல்லூர் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்  சுரேந்திரநாதன் உடனிருந்தனர். காரைநகரில் முத்தமிழ் கலைவிழா
 31.10.2014 - வெள்ளிக்கிழமை

காரைநகரில முத்தமிழ் கலைவிழா களபூமி முத்தமிழ் பேரவையின் தலைவர் நடராசா இராசமலர் தலைமையில் யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயமண்டபத்தில் நடைபெற்றது.

இம் முத்தமிழ் கலைவிழா நிகழ்வில் காரைநகர் பிரதேச சபையின் எதிர்க் கட்சித் தலைவரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச இணைப்பாளருமன வீ.கண்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  

இந் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் தமிழர்களது மரபிலே கலையும், கலாசாரமும் ஒன்றாக பின்னிப் பிணைந்தவையாகும். தெவிட்டாத அமிர்தம் போல் மற்றவர் மனதிலே ஒரு மகிழ்ச்சியினை ஏற்படுத்துகிறது. இந்தச் சிறுவயதிலே கலையினை கற்பதனால் எதிர்காலத்தில் சிறந்த கலைஞர்களாக உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

 விஞ்ஞானத்துறை ஆராய்ச்சிகளுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு!
 31.10.2014 - வெள்ளிக்கிழமை

விஞ்ஞானத்துறை ஆராய்ச்சி வெளியீடுகளுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு இன்று (31) பத்தரமுல்லை வோட்டேர்ஸ் எச் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

கடந்த  2010, 2011, 2013 ஆம் ஆண்டுகளில் வெளியாகி பாராட்டுப் பெற்ற வெளியீடுகளே இந்நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தகவல்துறை மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தகவல்துறை மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சின் செயலாளர் தாரா விஜேயதிலக ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

வழங்கப்படுகின்ற ஜனாதிபதி விருது வெற்றிகரமாக பூரணப்படுத்தப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், புதிய கண்டுபிடிப்புக்களையும் தேசிய அளவில் மேலும் மேம்படுத்தும் பொருட்டு வழங்கப்படுவதாகும்.

ஆராய்ச்சியாளர்களை இனங்கண்டு அவர்களுக்குரிய உயர் நிலையினை வழங்கும் பொருட்டு 2001 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இச்செயன்முறையின் மூலம் தற்போது இலங்கையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தமது எழுத்துருவாக்கங்களை சர்வதேச துறையில் வெளியிடுமளவுக்கு இது வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


 இயற்கை அனர்த்தங்களால் இழப்புகளை சந்தித்த மலையக உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
 30.10.2014 - வியாழக்கிழமை

பதுளை மாவட்டம் கொஸ்லந்த மீரியபெத்த பிரதேசத்தில் நடந்த இயற்கை அனர்த்தங்களால் இடர்பட்டு, இழப்புகளை சந்தித்த மலையக மக்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் என ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெவித்துள்ளார்.

இது குறித்து உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுமாறும், தேவையான நிவாரணங்களை வழங்குமாறும் உத்தரவிட்டிருப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்றும் பார்வையிட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, ஜனாதிபதியின் பணிப்புரைகளில் எந்தவித காலதாமதத்துக்கும் இடம் கொடுக்காமல் அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

உறவுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, பெற்றோரை இழந்து அநாதரவாக நிற்கும் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் தேவைகள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் அவதானத்துடனும், மனிதாபிமானத்துடனும் செயல்பட்டு அந்தச் சிறுவர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை பத்துப்பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள அதேவேளை சரிந்த மண்ணுக்குள் மேலும் சுமார் முந்நூறு பேர் சிக்குண்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்ற செய்தியை கேட்டு ஆறாத துயரமடைந்தேன். மனது மறக்க முடியாத இந்த துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


 மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இடத்துக்கு ஜனாதிபதி விஜயம்!
 30.10.2014 - வியாழக்கிழமை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இடமான ஹல்மதுல்ல மீரியபெத்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு  மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

பதுளை மாவட்டத்தின் ஹல்மதுல்ல பிரதேசத்தில் மண்சரிவில் அகப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபத்தினையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அனுதாபங்களை தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தகுந்த அலுவலர்களிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண வழங்குதலுடன் காணாமற் போனோரை தேடிக் கொள்வதற்கு தகுந்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு பணிப்புரைகள் விடுத்துள்ளார்.

ஏற்பட்ட மண்சரிவினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 150 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. மொத்தமாக 150 வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. 57 குடும்பங்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர், இவர்கள் அனைவரும் தற்போது 02 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரென மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


 ஜனாதிபதி ஆழ்ந்த கவலை மீட்புப் பணிகளை துரிதமாக்க பணிப்பு
 30.10.2014 - வியாழக்கிழமை

ஹல்துமுல்ல, கொஸ்லந்த, மீரியபெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.

உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், தேவையான நிவாரணங்களை வழங்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நேற்று உடனடியாக பணிப்புரைகளை வழங்கினார்.

எமது சகோதர தோட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும் உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் அமைச்சர் தொண்டமானையும் அனுப்பி வைத்துள்ளார்.

திருகோணமலைக்கு சென்றுள்ள ஜனாதிபதி அங்கு பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து தனது கவலையை மேலும் வெளிக்காட்டினார்.

அத்துடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் ஜனாதிபதி அவர்கள் உச்ச அளவில் இயன்ற அனைத்து உதவிகளையும் அந்த மக்களுக்காக மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


 ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை முதலிடத்தில் சங்கக்கார பந்து வீச்சில் ரங்கன ஹேரத் மூன்றாமிடம்
 30.10.2014 - வியாழக்கிழமை

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட முதல் 10 சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

டேவிட் வார்னர், யூனிஸ்கான் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் கண்ட முதல் பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் 4 இடங்கள் முன்னேறி 7-வது இடம்பிடித்துள்ளார். தோல்வி கண்ட அவுஸ்திரேலிய அணியின் ஒரே சிறந்த பேட்ஸ்மென் டேவிட் வோர்னர் 4-ஆம் இடத்திற்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை வீரர் சங்கக்கார தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். டிவிலியர்ஸ், சந்தர்பால், வோர்னர், அஞ்சேலோ மேத்யூஸ், ஹசிம் ஆம்லா, யூனிஸ் கான், ரோஸ் டெய்லர், ஜோ ரூட், மைக்கேல் கிளார்க். ஆகிய பேட்ஸ்மென்கள் முதல் 10 இடத்தை ஆக்ரமித்துள்ளனர்.

பந்து வீச்சுத் தரவரிசையில், டேல்ஸ்டெய்ன், ரயன்ஹரிஸ், ரங்கன ஹெராத், மிட்செல் ஜொன்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், வெர்னன் பிலாண்டர், டிம் சவுதீ, பிராட், கிமார் ரோச், சயீத் அஜ்மல் ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

சகலதுறைவீரர்கள் தரவரிசையில் மிட்செல் ஜோன்சன் (37 மற்றும் 61 ஓட்டங்களை துபாய் டெஸ்டில் எடுத்ததால்) 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் ஸ்டூவர்ட் பிராடை பின்னுக்குத் தள்ளினார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தொடர்ந்து இந்தியாவின் அஸ்வின் முதலிடம் வகிப்பது மட்டுமே இந்திய கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்க்கும் அம்சமாகும்.


 
     
 
15A, Layards Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2503467 Fax: 94 11 2585255
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.