Home English Tamil
     
  Article Contents  
 
 நாம் எவருக்கும் அடிமையல்ல! தனித்துவங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
 03.07.2009 வெள்ளிக்கிழமை

உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் உரிமையுடன் முன்வைக்க நீங்கள் முன்வர வேண்டும் என்றும், நாம் எவருக்கும் அடிமைகளல்ல என்பதை உணர்ந்து எமது தனித்துவங்களை விட்டுக் கொடுக்காத வகையில் கௌரவமான வாழ்க்கையை நாம் மேற்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (3) காலை யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுடனான விஷேட சந்திப்பின்போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது, 1986ம் வருடம் மே மாதம் வருகைத் தந்திருந்ததன் பின்னர் 23 வருடங்கள் கழிந்த நிலையில் தான் இப் பல்கலைக்கழகத்திற்கு மீள வருகை தந்திருப்பதை உணர்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் தமிழ் தலைமைத்துவங்கள் இதற்கு பாரிய எதிர்ப்புகளைத் தெரிவித்ததாகவும் அதற்கு பிந்திய காலங்களில் யாழ் பல்கலைக்கழகம் நல்லதொரு திசையை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இடையில் அது குறுகிய சுயலாபங்களைக் கருதிய தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்டதாகவும் விளக்கிக் கூறினார்.
இன்றைய நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தை சரியான திசையை நோக்கி முன்னகர்த்துவதே தனது முக்கிய நோக்கம் என்பதை தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பில் உயர்கல்வி அமைச்சருடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் வெகுவிரைவில் உயர்கல்வி அமைச்சரை இங்கு அழைத்து வந்து குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை எட்டக் கூடிய வாய்ப்பினை உருவாக்க எதிர்பார்ப்பு கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ் தலைமைத்துவங்களின் தவறான வழிகாட்டுதல்கள் காரணமாக எமது மக்கள் இன்று பாரிய அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் எமது மக்களை இவ்வழிவுகளில் இருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு நிலையானதும் கௌரவமானதுமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதே தனது பிரதான பணியாகும் என்பதையும் விளக்கிக் கூறினார். 
மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பெருந்திரளான மாணவர்களிடையே இருந்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வெளிமாவட்ட மாணவர்களது போக்குவரத்து வசதிகள் வெகுவிரைவில் பூர்த்தி செய்யப்படும் என நம்பிக்கைத் தெரிவித்ததுடன் நலன்புரி நிலையங்களில் தங்கி இருக்கின்ற மாணவர்களது பெற்றோர்கள் குறித்த விபரங்களை வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாகவும், அதே நேரம் நலன்புரி நிலையங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் தான் முழு முயற்சி எடுத்து வருவதாகவும் இம்மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடாதிருக்கும் காலத்திற்கும் சேர்த்து நிவாரணத்துடன் கூடிய வசதிகள் இவர்களுக்கு செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை துணைவேந்தர் கைலாகு கொடுத்தும் மாணவர்கள் கரகோஷம் எழுப்பியும் வரவேற்றதுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு அமைச்சர் அவர்களை உற்சாகப்படுத்தியதுடன் மேற்படி சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
















 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.