வடக்கு மருத்துவமனையில் சேவை, உடல்கூற்று பரிசோதனை நேரங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு!

Friday, January 19th, 2018

வடக்கு மாகாண மருத்துவமனைகளில் சேவை வழங்கல் நேரத்துடன் உடல்கூற்று பரிசோதனை நேரத்தையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாண மருத்துவமனைகளில் பல்வேறு வகையான மருத்துவப் பிரிவுகள், சேவைகள் நடைபெற்று வருகின்றன. பௌதீகரீதியில் அதிகளவான கட்டடங்களில் அதிக சேவைகள் நடைபெறுகின்றன. இதனால் எந்த நேரத்தில் எந்த சிகிச்சைப் பிரிவு திறந்திருக்கும், அதற்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்பது தொடர்பில் பொது மக்கள் தடுமாறுகின்றனர்.

இதற்கு மருத்துவமனைகளில் தெளிவான விளக்கங்கள் போதாமல் உள்ளன. இதனால் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்கு எங்கே என்ன நேரத்தில் செல்வது, வெளிநோயாளர் பிரிவு எங்கே உள்ளது என்பது தொடர்பில் குழப்ப நிலையை அடைகின்றனர்.

எனவே இதனை நிவர்த்தி செய்வதுக்காக வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் சேவைகள் மற்றும் அவை நடைபெறும் நேரங்கள் போன்ற விளக்கங்களை உள்ளடக்கிய விவரங்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர உடல்கூற்று பரிசோதனை நடைபெறும் நேரத்தையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடல்கூற்றுப் பரிசோதனையானது சூரிய வெளிச்சம் உள்ளபோதே மேற்கொள்ள வேண்டும் என்ற முறைமை உள்ளது. ஆனால் மக்கள் தமது அவசரத்துக்காக மாலை வேளைகளிலும் உடல்கூற்றுப் பரிசோதனையை செய்து சடலங்களைத் தருமாறு கோருவார்கள். அந்த முறைமை தவறு.

இதனால் மருத்துவர்களும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். மாலை 6 மணிவரையே இதனை மேற்கொள்ள முடியும். அப்போது வெளிச்சம் இருக்கும். எனவே, இதனைக் கருத்தில்கொண்டு எனைய மருத்துவ சேவை நேரத்துடன் உடல்கூற்று பரிசோதனை நேரத்தையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: