தேசியக்கொடி ஏற்றாத விவகாரம்:  ரி.ஐ.டி விசாரணை முன்னெடுப்பு!

Sunday, December 10th, 2017

வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் தேசிய கொடியைப் புறக்கணிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்தன தெரிவித்துள்ளார்.

பியகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

மாகாண சபையின் அமைச்சர் ஒருவர் நாட்டின் தேசியக்கொடியை ஏற்ற முடியாது எனக் குறிப்பிடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அவர்கள் தாம் ஏற்றுக் கொள்ளும் தேசியக்கொடிகளைக் கொண்ட நாடுகளுக்குச் சென்று வாழலாம். அவ்வாறான சிந்தனைப் போக்குள்ளவர்கள் இலங்கையில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

மறு வாழ்வு வழங்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கில் அதிகளவில் உள்ளனர். அவர்கள் அரசியலில் பங்கெடுப்பது நல்ல அணுகு முறையாகவே கருத வேண்டியுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளுக்குச் செல்லாது அரசியலுக்கு வருவது சிறந்த விடயமே. அது தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித பாதகத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசு அவதானத்துடனேயே உள்ளது என்றார்.

Related posts: