தனியார் பேருந்து சேவைகள் புறக்கணிப்பு: பாடசாலை மாணவர்கள் பரிதவிப்பு!

Monday, July 24th, 2017

வட பகுதி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்னர்.

வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் இன்றைய தினம் சேவையில் ஈடுபடாதென வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் அறிவித்துள்ளது.

நல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை கண்டித்தே இந்த பகிஸ்கரிப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  சேவைப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தீவுப்பகுதி உள்ளிட்ட யாழ் நகரின் வெளிப் பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணம் நகர்ப்புற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்புரியும் ஊழியர்களும் பல அசௌகரியங்களை எதிரிகொண்டுள்ளதை காணமுடிகின்றது.

இந்த சம்பவம், திட்டமிடப்பட்டோ அல்லது நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தோ நடத்தப்பட்டதல்லவென காவல்துறை ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த தாக்கதலை நடத்தியவரின் உறவினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான சந்தேகத்திற்குரியவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சேவைப்பணிப் புறக்கணிப்பை தனியார் பேருந்து சங்கம் நடத்துகின்றமை மிக வேதனைக்குரிய விடயமென பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related posts: