சட்டவிரோத செயற்பாடுகளில் தென்னிலங்கை மீனவர்கள் – வடமராட்சி மீனவர்கள் கொந்தளிப்பு!

Wednesday, July 24th, 2019

வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்த தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டபோதும் அவர்கள் மீது பொலிசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கடற்பரப்பில் தென்னிலங்கையை சேர்ந்த 36 மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தபோது அவர்களை பருத்தித்துறை முனை பகுதி மீனவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் பொலிஸார் அவர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர்.

நீண்ட காலமாக குறித்த கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந் நிலையில் அது தொடர்பில் உரிய தரப்புக்களுக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் , அதனால் நேற்றைய தினம் தாமே கடலில் இறங்கி சட்டவிரோதமான தொழிலில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்தோம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 12 படகுகளில் வந்த 36 பேரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும், அவர்களை பொலிஸார் எச்சரித்து விடுவித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தென்னிலங்கை மீனவர்கள் இனியும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவார்கள் ஆயின் தாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் , எனவே உரிய தரப்பினர்கள் அது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பருத்தித்துறை முனை பகுதி மீனவர்கள் கோரியுள்ளனர்.

Related posts: