இந்தியாவை புறந்தள்ளிவிட்டு இலங்கை செயற்பட முடியாது – கல்வி இராஜாங்க அமைச்சர்!

Wednesday, June 6th, 2018

இந்தியாவை புறந்தள்ளிவிட்டு இலங்கை எந்தவொரு செயலையும் செய்யமுடியாதென்றும், அவ்வாறே இந்தியாவும் செயற்பட முடியாதென்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்நிலையில், இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் உதவிகளை பெற்று மலையக சமூகத்தை முன்னேற்ற வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் 14000 வீட்டுத் திட்டத்தில் 250 வீடுகளை தலவாக்கலை மடக்கும்புரை மேல் பிரிவு தோட்டத்தில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்குறித்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அத்தோடு, ஒரு சமூகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் இருப்பிடம், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய நான்கு விடயங்களும் சரியாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தவகையில், இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் மலையக மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கிடையில் உள்ள நல்லுறவு காரணமாகவே பாரதப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இந்திய வீட்டுத்திட்டத்தை கையளித்தார் என்றும், இரு நாடுகளினதும் உறவுகள் அவ்வாறே நீடிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: