ஆசிரிய ஆலோசகர் சங்கம் மாகாண கல்வி அமைச்சுக்கு கடிதம்!

Thursday, June 14th, 2018

வலிகாமம் கல்வி வலய பணிப்பாளரின் பொருத்தமற்ற செயற்பாட்டால் ஆசிரியர் ஆலோசகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்து மாகாண கல்வி அமைச்சுக்கு வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக அவர்களின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரிய ஆலோசகர்களின் சேவை தொடர்பில் வலிகாமம் கல்வி வலயப் பணிப்பாளர் எடுத்துவரும் பொருத்தமற்ற செயற்பாடுகள் காரணமாக நாம் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம்.

வலயத்தில் இருந்து சேவையாற்றும் எம்மை கல்வி அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் கோட்டங்களின் ஊடாகப் பணிகளை முன்னெடுப்பதற்கு இணைப்பு கடிதம் ஒன்றை வழங்கியிருந்தார். ஒரு நிலையத்தில் இருந்து சேவையாற்றும் எம்மை இரண்டாம் நிலையமான கோட்டத்தில் இருந்து சேவையாற்ற வைப்பது நியாயம் இல்லை.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து கிடைத்த விசாரணை முடிவின்படி மீண்டும் வலயத்தின் ஊடாக சேவையாற்ற பணித்துள்ளார்.

ஆனால் இது தொடர்பில் எழுத்து மூலமாக எமக்கு அறிவிக்கப்படவில்லை. வாய் மூலமாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒரு பாட ஆசிரிய ஆலோசகரின் கடமைப் பட்டியலை வேறு ஒரு பாட ஆலோசகருக்கு மாற்றி வழங்கி ஆலோசகர்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவித்து வருகின்றார்.

உதாரணமாக இந்து சமயம், இந்து நாகரிகம் ஆகிய பாடங்களுக்கு ஆலோசகர்கள் இருக்கும்போது அந்த பட்டியலை நடனம், சமூக விஞ்ஞான பாட ஆலோசகர் மற்றும் நிறைவேற்று உதவிக் கல்வி பணிப்பாளருக்கு வழங்கியுள்ளார்.

இவ்வாறு வலயப் பணிப்பாளரின் செயற்பாடுகள் எம்மை அவமானப்படுத்துவதாகவும் முறையற்றதாகவும் அமைந்துள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளது.

Related posts: