உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் மக்களோடு வாழ்ந்தவர்கள் நாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!!

Wednesday, July 18th, 2018

இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டு. ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசித்திருந்த எமக்கிருந்த பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக, அரச பாதுகாப்பினைப் பெற்றிருந்த நாம், இந்த சுயலாப அரசியல்வாதிகளைப் போல் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒதுக்கிய நிலையில் வாழ்ந்திருக்கவில்லை. உயிருக்கு அச்சுறுத்தலான அந்தக் காலகட்டங்களிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களுடன் மக்களாக இருந்து, எமது மக்களின் அன்றாட பிரச்சினைகள் முதற்கொண்டு அடிப்படை பிரச்சினைகள் வரைத் தீர்த்தவர்கள் நாங்கள என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி திருத்தச் சட்டமூலம், காணி பாரதீனப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்றைய தினம் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற வரி மற்றும் காணி பாரதீனப்படுத்துதல் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்துகொண்டு, எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உலகின் அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் தமது வருமானத்தினை ஈட்டிக் கொள்கின்ற ஒரு முறைமையாக வரிகளை அறவிடும் கொள்கையை செயற்படுத்தி வருகின்றன. வரிகளை அறவிடுவதற்கான முக்கிய நோக்கங்கள் பல இருக்கின்றன. குறிப்பாக, அரசுக்கான வருமானத்தினைப் பெற்றுக் கொள்வது, வளங்களின் சிக்கல் தன்மைகளை குறைத்து, வளங்களை நியாயமான வகையில் பகிர்தல் மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளை வினைத்திறன் கொண்டவையாக ஆக்குதல் என்பன இந்த நோக்கங்களில் மிக முக்கியமானவையாகின்றன.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் மேற்படி முக்கிய நோக்கங்கள் அவதானத்தில் கொள்ளப்படாமல், அரசின் அதிகரித்துள்ள செலவினங்களை ஈடுசெய்வதற்காகவே பல்வேறு பெயர்களில் வரிகள் அறவிடப்பட்டு வருவதையே காணக்கூடியதாக இருக்கின்றது.

அதாவது, பொருளாதார நெருக்கடிகள் உக்கிரம் அடைகின்றபோது, வெறுமனே வருமானம் மாத்திரம் ஈட்டிக் கொள்ளக்கூடிய பொறிமுறை வரையில், வரிகளை அறவிடும் கொள்கையின் அணுகுமுறையானது வீழ்ச்சி நிலைக்குத் தள்ளப்படுகின்றது. இதன் காரணமாக இக் கொள்கையானது வெறுமனே வருமானம் ஈட்டுகின்ற இலக்கு கொண்டதாக மாற்றப்படுகின்ற நிலையில், இதன் மூலமாக முறையான பொருளாதார முகாமைத்துவத்தினையோ, வினைத்திறனையோ எதிர்பார்க்க இயலாதுள்ளது.

அந்த வகையில், இந்த நாட்டில் அனைத்துத் துறைகளையும்போல், இந்த வரிகளை அறிவிடுகின்ற செயற்பாட்டிற்கும் ஒரு நிலையான கொள்கை இன்மை காரணமாக, இன்று இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் செத்த பிணங்களாக இருக்கின்ற நிலையில், அந்த பிணங்களிலிருந்து எதையோ பிடுங்குவதைப் போல், வரிகள் கறக்கப்பட்டு வருவதாகவே உணர முடிகின்றது.

இந்த நாட்டில் 60 வீதமான மாவட்டங்கள் தொடர்ந்தும் கடந்த இரண்டறை வருடங்களாக வறுமைக் கோட்டின் கீழ் இருப்பதாக புள்ளி விபரவியல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு ஒருவருக்கு மாதாந்த ஆகக் குறைந்த தொகையாக 4,584 ரூபாவே பதிவாகி இருக்கின்றது.

வறுமைக் கோட்டில் அல்லது அதற்குக் கீழ் வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்துறை சார்ந்தவர்களாக இருப்பதாகவும், கடற்றொழில் துறை சார்ந்தவர்களும் இதற்குள் உள்ளடங்குகின்றனர் என்றும் தெரிய வருகின்றது.

இந்த நிலையில், விவசாயத்தையும், கடற்றொழிலையும் நம்பி அதிகளவிலான மக்கள் வாழுகின்ற எமது பகுதிகளின் மக்களின் நிலை குறித்து எவரும் சிந்திப்பதாகத் தெரிய வரவில்லை.

சாத்தியமற்றவை என எவை எல்லாம் தெரிகின்றனவோ, அவற்றின் பின்னால் ஓடிக் கொண்டு, அடுத்த தேர்தல் வரை காலத்தைக் கடத்துவதே சில தமிழ் அரசியல் வாதிகளின் கொள்கையாக இருக்கின்ற நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற மக்களது பொருளாதார வீழ்ச்சி நிலை தொடர்பில் நான் தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றேன். எனது இந்தக் குரலானது வடக்கு, கிழக்கு மாகாண மக்களினதும், இந்த நாட்டின் அனைத்து மக்களினதுமான குரலாக ஒலிப்பதற்குக் காரணம், நாம் கொண்டுள்ள அரசியல் கொள்கையில் எவ்விதமான பிரிவினைகளுக்கும் இடமில்லை என்பதாகும்.

ஆனால், ஒரு சிலர் – தமிழ்த் தரப்பிலாகட்டும், சிங்களத் தரப்பிலாகட்டும் – தங்களது சுயலாப அரசியல் கருதிய இனவாதப் பேச்சுகளால் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையிலான பிரிவினையை மேலும் விரிவடையச் செய்து, எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வாய்ப்புகளை இழக்கச் செய்து வருகின்றனர்.

‘புலிகள் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தனர்’ என இன்று தங்களது சுயலாப அரசியலுக்காகக் கூறுகின்ற இந்த அரசியல்வாதிகள,; புலிகள் இருந்த காலத்தில் யாருடைய பாதுகாப்பில் எங்கெல்லாம் இருந்தனர்? எனக் கேட்க விரும்புகின்றேன். புலிகள் காலத்திலிருந்து, யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் வரையில் அரச பாதுகாப்புடன் கொழும்பிலும், இந்தியாவிலும், பிற நாடுகளிலும் இவர்கள் இருந்ததை இவர்கள் மறந்து விட்டார்களா? எனக் கேட்க விரும்புகின்றேன். வடக்கு, கிழக்குப் பக்கமே தலைவைத்தும் படுக்காமல் இவர்கள் அக் காலகட்டத்தில் இவ்வாறு இருக்கவில்லையா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டு. ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசித்திருந்த எமக்கிருந்த பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக, அரச பாதுகாப்பினைப் பெற்றிருந்த நாம், இந்த சுயலாப அரசியல்வாதிகளைப் போல் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒதுக்கிய நிலையில் வாழ்ந்திருக்கவில்லை. உயிருக்கு அச்சுறுத்தலான அந்தக் காலகட்டங்களிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களுடன் மக்களாக இருந்து, எமது மக்களின் அன்றாட பிரச்சினைகள் முதற்கொண்டு அடிப்படை பிரச்சினைகள் வரைத் தீர்த்தவர்கள் நாங்கள்.

‘முதலில் அரசியல் தீர்வு! அதன் பின்னரே அபிவிருத்தி!’ என நாமும் அன்று கூறியிருந்தால், எமது மக்களில் பலர் அன்றே பட்டினியால் மாண்டிருப்பார்கள். இப்போது எமது மக்கள் இருக்கின்ற காணி, நிலங்கள்கூட அவர்களுக்குக் கிடைத்திருக்காது. சமுர்த்தி போன்ற நிவாரணத் திட்டங்கள் அப்போதே எமது மக்களுக்கு எட்டியிருக்காது. அரச தொழில்வாய்ப்புகள் எமது மக்களுக்கு அப்போது கிட்டியிருக்காது. கல்வித்துறை, சுகாதாரத்துறை என்பன மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கும். சிவில் நிர்வாகம் என்பது மீள் உயிர்ப்புப் பெறாமல், எமது மக்கள் அன்றே மேலும், மேலும் பாதிக்கப்பட்டிருப்பர். அடக்கி, ஒடுக்கப்பட்டு இன்று ஓர் அடிமைச் சமூகமாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கக்கூடும்.

எமது மக்களுக்கு அரசியல் தீர்வு என்பது முக்கியமாகும். ஆனால், முக்கியமானது அது மட்டுமே அல்ல. அதுவும் முக்கியம். அன்றாட, அடிப்படை, அபிவிருத்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதும் முக்கியம் என்ற கொள்கை அடிப்படையிலேயே நாம் செயற்பட்டு வருகின்றோம்.

இதன் அடிப்படையிலேயே இன்று நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறைமையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து, படிப்படியாக முன்னேறிச் செல்லக்கூடிய வகையிலான அதிகாரப் பகிர்வையே முன்வைத்து நாம் எமது மக்களுக்கான அரசியல் தீரிவினை வலியுறுத்தி வருகின்றோம். இதை விடுத்து, சாத்தியமற்றவையின் பின்னால் ஓடிக் கொண்டு, காலத்தைக் கடத்துவதற்கு நாம் தயாராக இல்லை.
இத்தகையதொரு அரசியல் தீர்வு முறையினை எட்டுவதற்கு இந்த நாட்டில் சட்ட ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ எவ்விதமான தடைகளும் இல்லை. எனவே, இந்த மாகாண சபை முறைமையினை வினைத்திறனுடன் செயற்படுத்தினால் எமது மக்களின் போதியளவு அன்றாட, அடிப்படை மற்றும் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். அதே நேரம், எமது அரசியல் உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைக்கான நிலையான தீர்வினை நோக்கியும் செயற்பாட்டு ரீதியில் நகர்வதற்கும் முடியும்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் இந்த அரசு அதிக அவதானம் எடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றேன். ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களும் இதே நிலைப்பாட்டினைத் தெரிவித்திருப்பதனால், இதனை முன்னெடுப்பதில் இந்த அரசுக்கு சிரமங்கள் எதுவும் இருக்கப் போவதில்லை என்றே கருதுகின்றேன்.

இன்று, வடக்கு மாகாணத்தில் எமது மக்கள் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொதுவாகவே இந்த நாட்டில் இன்று சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக மக்கள் உயிர் வாழ இயலாத ஒரு நிலைமையே ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில்தான் நீங்கள் எமது மக்களை கட்டியெழுப்புவதற்கு உரிய திட்டங்களைத் தீட்டாமல், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எனக் கூறியும் வரிகளை அறவிட்டு வருகின்றீர்கள்.

இத்தகைய வரிகளை எமது மக்களிடமிருந்து அறவிட்டு, அந்த நிதியை நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? என்ற கேள்வி எமது மக்களிடம் இல்லாமல் இல்லை. நாட்டின் கடன்களை அடைப்பதாகக் கூறி, மேலும், மேலும் கடன் வாங்குகின்ற நிலைமைகளையே உருவாக்கி வருகின்றீர்கள். ஊழல், மோசடிகள் இந்த நாட்டில் மலிந்து போயிருக்கின்றன.

அரச துறைகளைச் சார்ந்தவர்களில் 25 சதவீதமான அதிகாரிகள் ஊழலுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்திருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் அண்மையில் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் அரச நிறுவனங்களால் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமானத் தொகை நட்டமேற்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதிய வரிச் சட்டத்தின் கீழ் மக்களிடமிருந்து உழைக்கும்போதே செலுத்துகின்ற வரிகளையும் அதிகரித்துள்ள நீங்கள், அவற்றை அறவிடுவதற்கான சட்ட விதிகளை இறுக்கமாக்கியுள்ள நீங்கள், கசினோ சூதாட்ட நிலையங்களிலிருந்து அறவிடப்படக்கூடிய வர்த்தக வரிகளில் சுமார் 3,760 மில்லியன் ரூபாவினை அறவிடுவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமலே உள்ளீர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் அண்மையில் நடைமுறைப்படுத்தியுள்ள புதிய வரிச் சட்டம் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு சுமார் 3,000 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியே அறிவித்துள்ளது.

இத்தகைய நிலைப்பாடுகள் நாட்டில் நிலவுகின்ற நிலையிலேயே மேலும், மேலும் பொது மக்களையே இலக்கு வைத்து வரிகள் விதிக்கப்படுகின்றன. உள்ளவர்கள் பலர் வரிகளிலிருந்து தப்பித்துக் கொள்கின்ற அதே வேளை, இல்லாதவர்களை நோக்கியே இந்த வரிகள் பாய்வதாகவே தென்படுகின்றது.

எனவே, இந்த நாட்டின் பொது மக்கள் தொடர்பில் சற்றேனும் சிந்தித்துப் பார்த்து, அவர்களால் செலுத்தக் கூடிய வகையிலான – பொருத்தமான வரிகளை விதிப்பதற்கான ஒரு கொள்கையை வகுத்து, அதற்கிணங்க செயற்பட இந்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

நீங்கள் இங்கே அழகழகான பெயர்களில் வரிகளைக் கொண்டு வருகிறீர்கள். அதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறினால், அதற்காக அழகழகான விளக்கங்களையும் தருகின்றீர்கள். ஆனால், வறிய பொது மக்களாக இருந்து, ஒரு நாளுக்கான உணவை இந்த நாட்டில் தேடிப் பார்ப்பீர்களாயின், இந்த வரிகளின் கொடுமை உங்களுக்கே வெளிச்சமாகும் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அடுத்ததாக, காணி தொடர்பிலான விடயம் குறித்து இங்கே கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுமாயின் அதற்குரிய நேரம் போதாது என்றே நினைக்கின்றேன். அந்தளவிற்கு எமது பகுதிகளில் காணிப் பிரச்சினைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை என்றே கூற வேண்டும்.

கடந்த காலங்களில் எமது மக்களின் சொந்த காணி, நிலங்களில் சுமார் 18 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணி, நிலங்களை, கட்டிடங்களை விடுவிப்பதற்கு எங்களால் இயலுமாக இருந்;தது. அந்த செயற்பாட்டினை இந்த அரசாங்கமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற போதிலும், அண்மைக்காலமாக அதிலொரு மந்த கதி தொடர்வதையே காணக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக, யுத்தம் முடிவுற்றதன் பின்னர் 2010ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதி முதற்கொண்டு, 2014ஆம் ஆண்டு வரையில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணி, நிலங்களை வலிகாமம் வடக்கில் விடுவித்திருந்தோம். இந்த அரசு ஆட்சிபீடமேறியதன் பின்னர் வலிகாமம் வடக்கில் இதுவரையில் 3,789 ஏக்கர் காணி, நிலங்களே விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அந்த வகையில் பார்க்கின்றபோது, வலிகாமம் வடக்கில் இன்னமும் எமது மக்களின் காணி, நிலங்களில் சுமார் 3,656 ஏக்கர் காணி, நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தற்போது படையினர் வசமுள்ள எமது மக்களின் சொந்த காணி, நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற போதிலும், அவை எமது மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்காத வகையில் சுழற்சி முறையிலான கையகப் படு;த்தல்கள் இடம்பெற்று வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அதாவது, படையினர் வசமிடமிருந்து விடுவிக்கப்படுகின்ற எமது மக்களின் காணி, நிலங்களை வனத்துறையினர் மீளப் பிடித்துக் கொள்வதும், பின்னர் அவர்களிடமிருந்து விடுவித்துக் கொண்டால் அந்த காணி, நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிடித்து, வேலி அடைப்பதும், அவர்களிடம் இருந்தும் விடுவித்துக் கொண்டால், பின்னர், தொல் பொருள் திணைக்களத்தினர் அதனைப் பிடித்து அடைத்து வைப்பதும் என சுழற்சி முறையில் இந்த நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளை நீங்கள் அனுமதித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றே தெரிய வருகின்றது. அப்படி இல்லை! நீங்கள் இவற்றை எல்லாம் அனுமதிக்கவில்லை என்றால், மேற்படி அரசத் திணைக்களங்கள் அரசாங்கத்தைப் புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக செயற்படுகின்றனவா? என்ற கேள்வியே எழுகின்றது.

மேலும், காணி வங்கி ஒன்றைக் கொண்டு வரப் போவதாகக் கூறுகிறீர்கள். அதுவும் கொண்டு வரப்பட்டால் எமது மக்களிடம் இன்று இருக்கின்ற அற்ப, சொற்ப காணி, நிலங்களும் பறிபோய் விடுகின்றதும், மீளக் கிடைக்கப் பெற வேண்டிய காணி, நிலங்கள் கிடைக்கப்பெறாமல் போய் விடுகின்றதுமான அபாய நிலைமை உருவாகலாம் என்றே தோன்றுகின்றது.
ஒரு பக்கத்தில் இப்படி எல்லாம் செயற்படுகின்ற நீங்கள் இன்னமும் தேசிய நல்லிணக்கம் பற்றி பேசிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது என்பதைக் கூறி, விடைபெறுகின்றேன்.

நன்றி.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வலுவிழந்த பொருளாதாரத்தின் மத்தியில் ஏற்றுமதிகளின் மந்தமும், இறக்குமதிகளின் வேகமும் - நாடாளுமன்ற உறுப...
எமது மக்களின் நம்பிக்கையைப் பாதிக்காத வகையில் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் செயற்பட வேண்டும் - சபையி...