வெங்காயத்தைப் பதுக்கினால் குற்றம் !

Tuesday, August 27th, 2019


வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, அல்லது இலாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தினசரி சமையலில் தவிர்க்க முடியாத உணவுப் பொருள் வெங்காயம். இந்தியாவில் வெங்காய உற்பத்தியில் நாட்டில் மகாராஷ்டிரம், கர்நாடகம் மாநிலங்களே முன்னிலையில் இருந்துவருகின்றன.

இந்நிலையில் அண்மையில் அங்கு பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிடப்பட்டிருந்த விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.இதன் காரணமாக வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு வினியோகத்தில் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் தோன்றியுள்ளது.

அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில், வெங்காய உற்பத்தி குறைந்தால், மக்கள் பாதிப்பை எதிர்நோக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக முன்கூட்டியே ஆலோசிக்க இந்திய மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை அண்மையில் உயர் மட்டக்குழு கூட்டத்தை கூட்டியது. இதன்போது வெங்காயத்தின் விலையை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, அதை லாபகரமானதாக ஆக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் வெங்காய ஏற்றுமதி குறித்தும் ஆராயப்படும் எனவும் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.

Related posts: