‘தவறான பாதையில் நாட்டை வழிநடத்தமாட்டேன் – பிரதமர் மோடி

Monday, May 30th, 2016

தவறான பாதையில் நாட்டை வழிநடத்தி செல்லமாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக கூறினார்.

மத்தியில் பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் நேற்று சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிவடைந்து உள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு பெரிய பெரிய திட்டங்களை செயல்படுத்தியது. இதனால் நாடு பயன் அடையவில்லை. அதில் பெரிய பெரிய ஊழல் நடந்தது. அவர்கள் தான் (காங்கிரஸ்) பயன் அடைந்தனர்.

அதே குற்றத்தை நான் செய்யமாட்டேன். நான் நாட்டை தவறான பாதையில் வழி நடத்தி செல்ல மாட்டேன்.பா.ஜனதா ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். திறன் மேம்பாட்டு திட்டம், ஏழை மக்களின் பாதுகாப்பை கருதி காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இதன் மூலம் 25 கோடி ஏழை மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஜன்-தன் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் ரூ.37 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்களை செல்வந்தர்களாக கருதும் நிலை உருவாகியுள்ளது.

2 ஆண்டுகளில் செய்துள்ளோம் கடந்த 60 ஆண்டுகளில் செய்யாத வளர்ச்சி பணிகளை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம். நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வறட்சி ஏற்படுகிறது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக 11 மாநிலங்களின் முதல்-மந்திரிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினேன். தண்ணீரை தேக்கி வைக்கும் திட்டங்களை அமல்படுத்தும்படி அவர்களுக்கு கூறி இருக்கிறேன்.

இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் பெரிய முழக்கம். நாங்கள் மின்னணு சந்தையை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் விளைபொருட்களை விவசாயிகளே விற்பனை செய்யும் அதிகாரத்தை கொடுத்துள்ளோம். விவசாயிகள் அதிக விலையை பெற முடியும். 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த கனவை நிறைவேற்ற எனக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

தேவையற்ற சட்டங்களுக்கு முடிவுநாட்டில் உள்ள சட்டங்களில் 1,200 சட்டங்களால் எந்த பயனும் இல்லை. இந்த தேவையற்ற சட்டங்களுக்கு நாங்கள் முடிவு கட்டியுள்ளோம்.  விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சமையல் கியாஸ் மானியத்தை விட்டுக் கொடுக்கும்படி நான் வேண்டுகோள் விடுத்தேன். இதை ஏற்று நாட்டில் 1.13 கோடி குடும்பங்கள் கியாஸ் மானியத்தை விட்டுக் கொடுத்தன. நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும். ஒரே ஆண்டில் புதிதாக 3 கோடி குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வளர்ச்சியில் நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள். இதை அடைய நான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Related posts: