ஆசிபா பாலியல் கொலையில் அரசியல் வேண்டாம்  – இந்தியப் பிரதமர்  மோடி!

Friday, April 20th, 2018

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கதுவா சம்பவம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் கொலை குறித்து முதல் தடவையாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடி தொடர்ந்தும் தெரிவிக்கையில்-

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் போது, நாம் கடந்த கால அரசாங்கத்தின் போது நடைபெற்ற எண்ணிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் வன்கொடுமைதான். இதை எவ்வாறு நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்? இப்பிரச்சினையில் அரசியல் செய்யக் கூடாது.

சமீப கால பாலியல் தாக்குதல்கள் இந்தியாவை அவமானப்பட வைக்கும் செயல் ஆகும். நமது நாட்டில் ஒவ்வொரு முறையும், பெண்களே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற குற்றங்களை செய்யும் ஆணும் யாரோ ஒருவரின் மகன் தான். நமது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது கவலை அளிக்கக் கூடியது மட்டும் அல்லாமல் தேசத்துக்கே அவமானம் தரக்கூடியது” என்றார்.

முன்னதாக, லண்டன் சென்ற பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் கையில் பதாகைகளை ஏந்தியபடி எதிர்ப்பு தெரிவித்தனர். கதுவாவில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம் இடம் பெற்று இருந்த பதாகைகளை ஏந்தியபடி மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: