அமெரிக்காவில் தங்கி தொழில் செய்ய:  எச்-1 பி வீசா விண்ணப்பம் ஏப்ரல் 1 முதல் ஏற்பு!

Friday, March 18th, 2016

குடியுரிமை பெறாமல் அமெரிக்காவில் தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டவர்க்கு அந்த நாடு எச்-1 பி வீசாக்களை வழங்கிவருகிறது.

இந்த வீசாக்கள் வழங்கப்படுவது பல்வேறு நாட்டவர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. 2017ஆம் நிதி ஆண்டுக்கான இந்த வீசா விண்ணப்பங்களை அமெரிக்கா ஏப்ரல் 1ஆம் திகதி முதல் ஏற்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1ஆம் திகதி தொடங்கும் நிதி ஆண்டுக்கு 65 ஆயிரம் எச்-1 பி வீசாக்கள் வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

முதலில் பெறப்படுகிற அமெரிக்காவின் முதுநிலை அல்லது உயர் பட்டங்கள் பெற்றவர்களின் 20 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு, இந்த 65 ஆயிரம் எச்-1 பி வீசா என்ற எண்ணிக்கை வரையறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

வீசா விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிற முதல் 5 பணி நாட்களிலேயே 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவியும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு கூறி உள்ளது.

மேலும், மிக அதிக எண்ணிக்கையிலான எச்-1 பி வீசா விண்ணப்பங்கள் பெறப்படுகிற போது கணினி வழி லாட்டரி குலுக்கல் நடத்தி வீசாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: