அமெரிக்காவில் “எச் 4” விசா இரத்து: 1 இலட்சம் வெளிநாட்டினர் பாதிப்பு!

Tuesday, May 15th, 2018

அமெரிக்காவில் “எச் 4” விசா எதிர்வரும் ஜீன் மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்ற தகவலால் அங்கு பணிபுரிந்து ஒரு இலட்சம் வெளிநாட்டவர்கள் பாதிப்படையவுள்ளனர்.

அமெரிக்காவில் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டினர் ஏராளமான அளவில் பணிபுரிகின்றனர். இவர்கள் எச்1 ௲ பி விசா பெற்றுள்ளனர். அவர்களது மனைவி அல்லது கணவன்மார்கள் பணிபுரிய எச்4 விசா வழங்கப்பட்டுள்ளது. இச் சலுகை முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது.

ஆனால் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் வேலைவாய்ப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தார். அமெரிக்கர்களுக்கே வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனால் எச்1 – பி விசா வழங்குவதில் நடைமுறை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் அங்கு பணிபுரியும் வாழ்க்கை துணைவருக்கு வழங்கப்பட்ட எச்4 விசா ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஆனால் இது எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது எச்4 விசா ஜீன் மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கருத்து அறிய 30 முதல் 60 நாள்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும். எனவே அதற்கான அறிவிப்பை ட்ரம்ப் அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கையால் அமெரிக்காவில் எச்4 விசாவில் பணி புரியும் 1 இலட்சம் வெளிநாட்டினர் கடும் பாதிப்புக்குள்ளாவர்.

அதன்மூலம் அமெரிக்காவில் தொழில் தொடங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்களும் பாதிப்படையும். எனவே அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளன. எனவே இந்த ரத்து நடவடிக்கை மேலும் கால தாமதமாகும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் எச்4 விசா ரத்து நடவடிக்கையை ட்ரம்ப் அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

Related posts: