70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கோண கிரிக்கெட் போட்டி!

Saturday, January 21st, 2017

2018ஆம் ஆண்டு இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர கிண்ண சுற்றுப்போட்டி ஒன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் ஆலோசித்து வருகின்றது. இதன் காரணமாக 2017/2018 பருவகாலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் தென்னாபிரிக்காவிற்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் கைவிடப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.

இலங்கை அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த அதே காலப்பகுதியில் இந்திய அணி தென்னாபிரிக்காவுடன் தொடர் ஒன்றில் விளையாட ஏற்பாடாகியிருப்பதாக இம்மாதத்தின் முற்பகுதியில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாரூன் லோர்காட் தெரிவித்திருந்தார்.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றுக் கொண்டது. சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்திய அணி உட்பட மூன்று அல்லது நான்கு அணிகளை உள்ளடக்கிய சுற்றுப்போட்டி ஒன்றை நடாத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் எதிர்பார்த்துள்ளது.

சுற்றுத்தொடரின் போட்டி அட்டவணை, மைதானங்கள் மற்றும் கலந்துகொள்ளவுள்ள அணிகளின் விபரங்கள் இலங்கை கிரிக்கெட் சபையினால் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் தினங்களில் வெளியிடப்படும்.

இந்திய – தென்னாபிரிக்க தொடர் மற்றும் இந்திய – பாகிஸ்தான் தொடர்கள் ஒரே காலப்பகுதியில் இடம்பெறும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளன. எனினும் இந்திய அணி தென்னாபிரிக்க சுற்றுத்தொடரிலே அதிக ஆர்வம் காட்டி வருகின்றது. இதன் காரணமாக எமது தென்னாபிரிக்கத் தொடர் இடம்பெறுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. நாம் இது தொடர்பாகவும் ஒற்றுமை கிண்ண சுற்றுத்தொடர் சம்பந்தமாகவும் டுபாயில் இடம்பெறும் அடுத்த சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளோம்” என இலங்கை கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்திய அணி சுதந்திர கிண்ண சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தது. எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினுள் ஒரு குழப்பமான சூழ்நிலை காணப்படுகின்ற காரணத்தினால் எம்மால் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்றினை தற்போது மேற்கொள்ள முடியாதுள்ளது. இவ்வருடத்தின் இறுதிப் பகுதியில் இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன “ என அவர் மேலும் கருத்து வெளியிட்டார்.

பங்களாதேஷ் அணியும் 1998 ஆம் ஆண்டு தங்களது சுதந்திர தின வெள்ளி விழாவினை முன்னிட்டு இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் முக்கோணக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்தியாவும் அதன் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடிய சந்தர்ப்பம் ஒன்றும் உள்ளது.

34col7144813700_5167409_20012017_AFF_CMY

Related posts: