“17ஆவது வீரர்களின் போர்” சமநிலையில்!

Sunday, February 19th, 2017

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லுரிக்கும் இடையில் 2001ஆம் ஆண்டு முதல் “வீரர்களின் போர்” என வர்ணிக்கப்படும இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி இடம்பெற்று வருகின்றது. அவ்வகையில் 17ஆவது வீரர்களின் போர் நேற்று முன்தினம் முதல் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில்  இடம்பெற்றிருந்தது.

ஸ்கந்தவரோதாயாக் கல்லூரி அணி முரளிக் கிண்ணப் போட்டிகளில் யாழ் மாவட்ட பாடசாலைகள் இணைந்த அணியை தொடர்ச்சியாக இருமுறை பிரதிநிதித்துவப்படுத்திய சயந்தன் தலைமையிலும், தொடர்ச்சியாக மூன்றாவது முறையும் வெற்றிபெற்று கிண்ணத்தைத் தமதாக்கும் நோக்குடன் சகலதுறை வீரரான டினேஷ் தலைமையில் மகாஜனக் கல்லூரி அணியும் களமிறங்கின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கந்தாவின் தலைவர் சயந்தன் மகாஜனக் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். அதனடிப்படையில் துடுப்பெடுத்தாடக் களம் புகுந்த மகாஜனக் கல்லூரி வீரர்கள் சோபிகனின் பந்தை முகங்கொடுக்க முடியாது திணறினர்.

விரைவாக விக்கெட்டுகளை இழந்த மகாஜனக் கல்லூரி 34 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இனிங்ஸிற்காக வெறுமனே 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. மகாஜனக் கல்லூரி சார்பாக அதிகபட்சமாக ஜசிந்தன் 31 ஓட்டங்களையும், சுஜீபன் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர். பந்துவீச்சில் ஸ்கந்தா சார்பாக 4 ஓட்டமற்ற ஓவர்கள் உள்ளடங்கலாக 10 ஓவர்கள் பந்து வீசிய சோபிகன் 24 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா சார்பில் தலைவர் சயந்தன், அஜிந்தன் ஆகியோர் அரைச்சதம் கடக்க முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 58 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி, 8 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாவது நாளாக தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா கல்லூரி காலை வேளையில் 5 ஓவர்களை மாத்திரம் முகங்கொடுத்து 9 ஓட்டங்களை மாத்திரம் மேலதிகமாகச் சேர்த்து தமது ஒட்ட எண்ணிக்கையை 186 ஆக உயர்த்தினர். பந்துவீச்சில் மகாஜன கல்லூரி சார்பாக தலைவர் தினேஷ் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உள்ளடங்கலாக 15 ஓவர்களை வீசி 56 ஓட்டங்களை கொடுத்து 6  விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

77 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையின் தமது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த மகாஜனக் கல்லூரி அணி ஆரம்பத்தில் சற்றுத்தடுமாறியபோதும் ஜனுசனின் அரைச்சதம், முரளிதரனின் 39 ஓட்டங்கள் மற்றும் தினேஷின் ஆட்டமிழக்காத 30 ஓட்டங்களினதும் துணையுடன், 66 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.

ஸ்கந்த சார்பாக பந்துவீச்சில் 18 ஓவர்களை  வீசிய சோபிகன் 53 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கஜிபன், டன்சன், கோகுலக்சன் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளைத் தமதாக்கினர்.

20 ஓவர்களில் 140 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஸ்கந்தா அணியினர் அடித்தாட முற்பட்ட வேளையில் தமது விக்கெட்டுகளை சடுதியாக இழந்தனர். ஸ்கந்தா இலகு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டி சடுதியாக மகாஜனவின் பக்கம் திரும்பியது. அந்நிலையில் களம்புகுந்த சயந்தன் அடித்தாடி தம்பக்கம் போட்டியை மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் 31 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க ஸ்கந்தாவின் வெற்றிக்கனவு கலைந்தது, தொடர்ந்து வந்த சாருஜன், கஜீபன் ஆகியோர் போட்டியை சமநிலை நோக்கி நகர்த்தினர். போட்டி நேர முடிவில் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக 20 ஓவர்களை எதிர்கொண்ட ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் போட்டி சமநிலையில் நிறைவுற்றிருந்தது.

விருதுகள்

  • ஆட்டநாயகன் – யனுசன் (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி)
  • சிறந்த சகலதுறை வீரர் – தினேஷ் (மகாஜனக் கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – சயந்தன் (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி)
  • சிறந்த பந்துவீச்சாளர் – சோபிகன் ( ஸ்கந்தவரோதயாக் கல்லூரி)
  • சிறந்த களத்தடுப்பாளர் – ஜசிந்தன் (மகாஜனக் கல்லூரி)

போட்டியின் சுருக்கம்

மகாஜனக் கல்லூரி அணி (முதல் இனிங்ஸ்): 109 (34) – ஜசிந்தன் 31, கஜீபன் 15, சோபிகன் 24/6

ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி (முதல் இனிங்ஸ்): 186 (63) – சயந்தன் 56, அஜித்தன் 52, தினேஷ் 56/6

மகாஜனக் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்): 217 (66) – யனுசன் 52, முரளிதரன் 39, தினேஷ் 30, சோபிகன் 53/3

ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி (இரண்டாவது இனிங்ஸ்): 86/6 (20) – சயந்தன் 32, யனுசன் 39/3, தினேஷ் 22/2

17ஆவது வீரர்களின் போர் சமநிலையில் நிறைவுற்றதன் அடிப்படையில் 8ஆவது முறையாக சமநிலை முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது. அதேவேளை, இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மகாஜனக் கல்லூரி 5 போட்டிகளிலும், ஸ்கந்தவரோதயாக் கல்லூரி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

DSC_0122

 

Related posts: