அவுஸ்திரேலியாவின் வேகத்தில் சரிந்த இங்கிலாந்து!

Saturday, August 17th, 2019


லண்டனின் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 258 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி இங்கிலாந்து அணியில் ராய், பர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராய் ஓட்டங்கள் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த அணித்தலைவர் ஜோ ரூட் 14 ஓட்டங்களிலேயே ஹேசல்வுட் பந்துவீச்சில் வெளியேறினார்.

சில ஓவர்கள் தாக்குப்பிடித்த டென்லியும்(30) அவுட் ஆனார். ஹேசல்வுட், கம்மின்ஸின் மிரட்டலான பந்துவீச்சில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அணியின் score 116 ஆக இருந்தபோது, தொடக்க வீரர் பர்ன்ஸ் 53 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.

ஆல்ரவுண்டர் பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ் இருவர் மட்டும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இவர்களது கூட்டணி 72 ஓட்டங்கள் சேர்த்தது. எனினும், கிறிஸ் வோக்ஸ் 32 ஓட்டங்களில் வெளியேற, ஆர்ச்சர் மற்றும் பிராட் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அரைசதம் அடித்த பேர்ஸ்டோவ் 52 ஓட்டங்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக லயன் பந்துவீச்சில் அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 258 ஓட்டங்கள் எடுத்தது.

அவுஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், ஹேசல்வுட், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சிடில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

டேவிட் வார்னர் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கவாஜா 18 ஓட்டங்களுடனும், பான்கிராஃப்ட் 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related posts: