வடக்கின் போர்: முதல் நாள் ஆட்டத்தில் பந்துவிச்சாளர்கள் ஆதிக்கம்!

Friday, March 11th, 2016

வடக்கின் போரில் நேற்றைய முதலாம் நாளில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி 161 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்ததுடன், பதிலுக்கு களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரி முதல்நாள் நாள் முடிவில் 04 இலக்குகள் இழப்புக்கு 60 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி ஆரம்ப வீரர்களாக் களமிறங்கினர் ஜெரோசனும் பிரியலக்சனும். அடித்தளம் பலமாக அமையவில்லை. அணியின் ஓட்ட எண்ணிக்கை ஆறாக இருந்த போது நான்கே ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் பிரியலக்சன். கோமேதகன் – ஜெரோசன் இணை மேலதிக இலக்குகள் இழப்பில்லாமல்50 ஓட்டங்களைக் கடந்தும் தாக்குப்பிடித்தது.

இரண்டாவது இலக்குக்காகப் பகிரப்பட்ட இணைப்பாட்டத்தை சென். ஜோன்ஸ் பந்து வீச்சாளர்களின் திடீர் எழுச்சி இல்லாமல் செய்துவிட்டது. 39 ஓட்டங்களுடன் வீழ்ந்தார் கோமேதகன். கானமிர்தனின் பந்தில் ஒற்றையிலக்கத்துடன் வீழ்ந்தார் கௌதமன். அரைச்சதம் கடந்தார் ஜெரோசன். 51 ஓட்டங்களுடன் ஜெரோசன் ஆட்டமிழந்ததுதான் தாமதம் பின்வரிசை கடகடவெனச் சரிவு கண்டது. டினோயன், ராஜ் இருவரும் மட்டுமே பின்வரிசை வீரர்களில் இரட்டை இலக்கத்தில் ஓட்டங்களைப் பெற்றனர். முடிவில் யாழ். மத்திய கல்லூரி சகல இலக்குகளையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.

பந்து வீச்சில் சென். ஜோன்ஸ் கல்லூரியின் சார்பாக யதுசன் 04 இலக்குகளையும், நிலோயன் 03 இலக்குகளையும், கானமிர்தன் 02 இலக்குகளையும், கபில்ராஜ் ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்குக் களமிறங்கியது சென். ஜோன்ஸ், ஆரம்ப வீரர்களாகச் சோமஸ்கரன் மற்றும் தேவபிரசாந். இடது வலது இணை பந்து வீச்சாளர்களுக்கு சற்று சிரமம் கொடுக்கத்தான் செய்தது. பவுண்டரிகள் பெரிதாக இல்லாவிட்டாலும் அவ்வளவு இலகுவாக இணைப்பாட்டத்தைப் பிரித்துவிட முடியவில்லை. 14 பந்துப் பரிமாற்றங்கள் வரை இலக்குச் சரிவு ஏற்படவில்லை. அணியின் ஓட்ட எண்ணிக்கை 26ஆக இருந்த பொழுது 08 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார் சோமஸ்கரன். ஓட்டம் எதனையும் பெறாது திசோபனிடம் சிக்கினார் சுபீட்சன் திப்பியூஸ். தேவபிரசாந்தை வெளியேற்றினார் தீபன்ராஜ். நான்கே ஓட்டங்களுடன் ஜெனி பிளெமிங்கும் ஆட்டமிழக்க சென். ஜோன்ஸ் திடீர்ச் சரிவு கண்டது.

கபில்ராஜ், கிசாந்துயன் இணைய நாள் முடிவில் சென். ஜோன்ஸ் கல்லூரி 04 இலக்குகளை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. கபில்ராஜ் 20 ஓட்டங்களுடனும் கிசாந்துயன் 07 ஓட்டங்களுடனும் இரண்டாம் நாளுக்காக இன்று களமிறங்குவார்கள்.

பந்துவீச்சில் மத்திய கல்லூரியின் சார்பாக தீபன்ராஜ் 02 இலக்குகளையும், திசோபன், அலன்ராஜ் இருவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றியுள்ளனர்.

12829190_1041704422534236_8894249626960182166_o-670x447

Related posts: