மெஸ்சியின் சொதப்பல் – பரிதாபமாக வெளியேறியது அர்ஜெண்டினா!

Friday, July 5th, 2019

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில், மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி 0-2 என்ற கோல் கணக்கில் பிரேசிலிடம் தோல்வியடைந்தது.

பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் பிரேசில்-அர்ஜெண்டினா அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, ஆகுவரோ ஆகியோர் கோல் அடிக்க கடுமையாக போராடினர். ஆனால், அவர்கள் அடித்த ஷாட்கள் துரதிர்ஷ்டவசமாக கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் பிரேசிலின் ஜீசஸும், 71வது நிமிடத்தில் ராபர்டோ பர்மினோவும் கோல் அடித்தனர். அர்ஜெண்டினா அணியால் இதற்கு பதில் கோல் அடிக்கவே முடியவில்லை.

குறிப்பாக, பிரேசில் கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு அர்ஜெண்டினாவின் பல முயற்சிகளை முறியடித்தார். இறுதியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

முன்னதாக, கொலம்பியா அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்சி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அந்தப் போட்டியில் அர்ஜெண்டினா 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அதேபோல் இந்தப் போட்டியில் மெஸ்சி ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். கடந்த 2005ஆம் ஆண்டுக்கு பின்னர், பெரிய தொடர்களில் பிரேசில் அணியை அர்ஜெண்டினா வீழ்த்தியதில்லை என்ற சோக வரலாறு தொடர்கிறது.

இதனைத் தொடர்ந்து, 6ஆம் திகதி நடைபெற உள்ள 3வது இடத்திற்கான போட்டியில் சிலி அணியை அர்ஜெண்டினா எதிர்கொள்கிறது.

ஜூலை 7ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், பிரேசில்-பெரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Related posts: