முதலாவது டெஸ்ட்டில் வெற்றிபெற்றது இந்தியா

Sunday, July 30th, 2017

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 304 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது.

கடந்த 26 ஆம் ஆரம்பமான ஐந்து நாட்களைக் கொண்ட இந்த போட்டி இன்றைய நான்காம் நாளுடன் நிறைவிற்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 600 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் தவான் 190 ஓட்டங்களையும், புஜாரா 153 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் நுவான் பிரதீப் 6 விக்கட்டுக்களையும், லஹிரு குமார 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சலக விக்கட்டுக்களையும் இழந்து 291 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 309 ஓட்டங்களினால் பின்னிலையில் இருந்தது.

துடுப்பாடத்தில் டில்ருவான் பெரேரா ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களையும், மெத்தியூயஸ் 83 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் ஜடேஜா 3 விக்கட்டுக்களையும், மொஹம்மட் சமி 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 309 ஓட்டங்களினால் முன்னிலைப் பெற்றிருந்த இந்திய அணி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக 3 விக்கட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இரண்டாவது இன்னிங்சில் அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

முதல் இன்னிங்சில் முன்னிலையான 309 ஓட்டங்களுடன் இந்திய அணி 549 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், இலங்கை அணிக்கு 550 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி இன்றைய நான்காம் நாளில் தமது அட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி வெறுமனே 245 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சகல விக்கட்டுக்களையும் இழந்து 304 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரத்ன 97 ஓட்டங்களையும், டிக்வெல்ல 67 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

இரண்டாம் இன்னிங்சில் இலங்கை அணியின் 8 விக்கட்டுக்களே வீழ்த்தப்பட்டதுடன், போட்டியில் காயமடைந்த இலங்கை அணி வீரர்களான அசேல குணரத்தன, தலைவர் ரங்கன ஹேரத் ஆகியோர் துடுப்பெடுத்தாடியிருக்கவில்லை.

முதல் இன்னிங்சில் 190 ஒட்டங்களைப் பெற்றுக் கொடுத்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரா் தவான் போட்டியின் நாயகனாக தெரிவானார்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: