சிறந்த வீரராக சாமுவேல்ஸ்!

Friday, July 22nd, 2016

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவின்போது, ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி வீரராகவும், ஆண்டின் சிறந்த வீரராகவும் மார்லன் சாமுவேல்ஸ் பெயரிடப்பட்டார்.

2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் 22 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற சாமுவேல்ஸ், மூன்று சதங்கள் உள்ளடங்கலாக 859 ஓட்டங்களைப் பெற்றதோடு, இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 பட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றுவதற்கும் முக்கியமானவராக அமைந்திருந்தார். குறித்த இறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 156 ஓட்டங்களை துரத்தியிருந்தபோது, இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்த சாமுவேல்ஸ், 66 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பெற்று, உலக இருபதுக்கு-20 இறுதிப் போட்டிகளில், தனது இரண்டாவது ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார்.

இதேவேளை, பெண்கள் அணியின் தலைவராக செப்டெம்பர் 2015ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஸ்டபனி டெய்லர், ஆண்டின் சிறந்த இருபதுக்கு-20 வீராங்கனை மற்றும் ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி வீராங்கனை விருதுகளை வென்றார். மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் அணியினை, முதலாவது உலக இருபதுக்கு-20 பட்டத்தை பெற்றுக் கொடுத்த டெய்லர், குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணிக்கெதிராக பெற்ற 59 ஓட்டங்கள் உள்ளடங்கலாக ஆறு போட்டிகளில் 246 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைப் பெற்றார். தவிர, 2015ஆம் ஆண்டு ஆரம்பம் முதல், 10, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி, 70.14 என்ற சராசரியில் 491 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக டரன் பிராவோ தெரிவானதுடன், ஆண்டின் சிறந்த இருபதுக்கு-20 கரீபியன் வீரராக டுவைன் பிராவோ தெரிவானதுடன், ஆண்டின் சிறந்த இருபதுக்கு-20 வீரராக கிறிஸ் கெய்லும் தெரிவாகினர்.

இது தவிர, இலங்கை அணிக்கெதிராக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் டெஸ்ட் அறிமுத்தை மேற்கொணடு ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ஜோமெல் வொரிக்கான், ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரராக தெரிவானதுடன், இவ்வருட ஆரம்பத்தில், பங்களாதேஷில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த ஷிம்றோன் ஹெட்மயர், ஆண்டின் சிறந்த 19 வயதுக்குட்பட்ட வீரராக தெரிவானார்.  குறித்த தொடரின் ஆறு போட்டிகளில் 158 ஹெட்மயர் பெற்றிருந்தார்.

Related posts: