இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது – பயிற்றுநர் சில்வர்வூட் தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022

ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விடயங்களை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால், சில அம்சங்களில் குறிப்பாக களத்தடுப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னரே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வவூட் இதனைத் தெரிவித்துள்ளார்..

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த அணிகளை இலங்கை வென்றெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டதோ அவற்றில் ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து ஆகிய அணிகளை முதல் சுற்றிலும் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை சுப்பர் 12 சுற்றிலும் இலங்கை வெற்றிகொண்டது.

மிகப் பெரிய அல்லது பிரபல்ய அணிகளான அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் இலங்கை தோல்வி அடைந்தது.

முதல் சுற்றில் நமிபியாவிடம் இலங்கை அடைந்த தோல்வி கிறிஸ் சில்வர்வூடை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பது நிச்சயம். அதேவேளை அந்தப் போட்டியில் அடைந்த தோல்வி இலங்கை அணிக்கு மாத்திரம் அல்ல முழு இலங்கைக்கும் பெரும் ஏமாற்றதைக் கொடுத்துள்ளது.

இங்கிலாந்துடனான கடைசிப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தால் குழு 1 இக்கான அணிகள் நிலையில் இலங்கை மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கும். ஆனால், இங்கிலாந்திடம் கடைசி ஓவர் வரை போராடி தோல்வி அடைந்த இலங்கையினால் அணிகள் நிலையில் 4ஆம் இடத்தையே பெற முடிந்தது.

எவ்வாறாயினும் இங்கிலாந்தை கடைசி ஓவர்வரை இலங்கை போராட வைத்தது சில்வர்வூடுக்கு திருப்தியைக் கொடுத்துள்ளது

‘இங்கிலாந்துடனான போட்டியில் தோல்வி அடைந்தது ஏமாற்றதைக் கொடுக்கிறது. ஆனால். எனது வீரர்கள் பெருமளவு திறமையை வெளிப்படுத்தினர். இங்கிலாந்துடன் எவ்வாறு விளையாடவேண்டும் என்பது குறித்து விரிவாக திட்டமிட்டோம். அதன் பலனாக இங்கிலாந்தை கடைசிவரை போராட வைத்தோம்’ என இங்கிலாந்தின் முன்னாள் பயிற்றுநர் சில்வர்வூட் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் பெயர் பெற்ற அணிகளை இலங்கை வெற்றிகொள்ளாதபோதிலும் தான் பயிற்றநராக பொறுப்பேற்றதிலிருந்து அணியில் முன்னேற்றதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது என கிறிஸ் சில்வர்வூட் கூறினார்.

‘ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு செல்வதற்கு முன்னர் வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் நாங்கள் ஆரம்பித்த சில முறைமைகளில் முன்னேற்றத்தை காணலாம்.

இங்கிலாந்துடனான போட்டியில் களத்தடுப்பு சற்று சிறப்பாக இருந்தபோதிலும் அவுஸ்திரேலியாவில் பொதுவாக இலங்கையின் களத்தடுப்பு சிறப்பாக அமையவில்லை என்பதை சில்வர்வூட் ஒப்புக்கொண்டார்.

‘களத்தடுப்பு விடயத்தில் நாங்கள் அதிகமாக கவனம் செலுத்தி கடுமையாக பயிற்சியில் ஈடுபடவேண்டும். அதிலிருந்து நாங்கள் ஒதுங்க மாட்டோம். இது நாங்கள் செய்யவேண்டிய ஒரு தொடர்ச்சியான செயல்முறை. அதில் நாங்கள் முன்னேறவேண்டும்’ என அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, ‘அடுத்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் அந் நாட்டு சூழ்நிலை இலங்கை வீரர்களுக்கு பழக்கப்பட்டது. அது எமது வீரர்களுக்கு அனுகூலமாக அமையும். ஆனால், சில விடயங்களை கட்டியெழுப்பவேண்டியுள்ளது’ என  கிறிஸ் சில்வர்வூட் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: