இறுதி விக்கெட் வரை போராடி வெற்றி பெற்றது சென்றலைட்ஸ்!

Thursday, January 11th, 2018

தோற்கவேண்டிய போட்டியில் இறுதிவரையில் மல்லுக்கட்டி 9 ஆவது விக்கெட் இணைப்பாட்டம் 43 ஓட்டங்களைப்பெற கிண்ணத்தை வென்றது சென்றலைட்ஸ் அணி.

துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இந்த கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டி 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற ஜொனியன்ஸ்  அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. ஜொனியன்ஸ் அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. 6.1 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பி.லவேந்திரா ஜே.கிசாந்துஜன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. லவேந்திரா 44 ஓட்டங்களுடனும் கிசாந்துஜன் 35 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. 49.3 ஓவர்களை எதிர்கொண்ட ஜொனியன்ஸ் அணி 168 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்து வீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக டர்வின் 10 ஓவர்கள் பந்து வீசி 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களையும் ஜெரிக் துசாந்த் 10 ஓவர்கள் பந்து வீசி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் மயூரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய சென்றலைட்ஸ் அணி ஆரம்பத்தில் ஓட்டங்களைப் பெறுவதை விட ஓட்டங்களை விரைவாக இழந்தது. 7.4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமாக தடுமாறியது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜெரிக்துசாந்த் – ஜெனோசன் ஜோடி அணிக்கு மிகுந்த நம்பிக்கை அளித்தது. இருவரும் ஜோடி சேர்ந்து அணியை மெதுவாக மீட்டெடுத்தனர். இருவரும் தலா 34 ஓட்டங்களைப் பகிர்ந்த போது ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த செல்ரன் தன் பங்கிற்கு 23 ஓட்டங்களைச் சேர்த்தார். அதன் பின்னரும் தடுமாறிய சென்றலைட்ஸ் அணி 126 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனினும் இறுதி விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்திருந்த ஜுலியஸ்கலிஸ்ரன் – மயூரன் ஜோடி மிக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சென்றலைட்ஸ் அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஜுலியஸ் கலிஸ்ரன் 24 ஓட்டங்களுடனும் மயூரன் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஜொனியன்ஸ் அணி சார்பாக ஏ.சஞ்சயன் 10 ஓவர்கள் பந்துவீசி 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களையும் லோகதீஸ்வரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

Related posts: