ஆஸி. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Friday, January 20th, 2017

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில், ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக நாணயச் சுழற்சியில்  வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்ய வந்த பாகிஸ்தானில் தொடக்க வீரர் ஹஃபீஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, உடன் வந்த ஷர்ஜீல் கான் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஆஸம் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். 100 பந்துகளை சந்தித்த அவர், 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் விளாசினார். ஷோயிப் மாலிக், உமர் அக்மல் தலா 39 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய ஆஸாத் ஷஃபிக் 5, இமத் வாஸிம் 9 ரன்களில் வீழ்ந்தனர். 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். முகமது ரிஸ்வான் 14, முகமது ஆமிர் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸில்வுட் 3, டிராவிஸ் ஹெட் 2, ஸ்டான்லேக், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதையடுத்து 264 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியாவில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அணியை வெற்றிக்கு வழி நடத்தினார். முன்னதாக, தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 35, உஸ்மான் கவாஜா 9 ரன்களில் வீழ்ந்தனர்.

அடுத்து வந்த ஸ்மித் 104 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 108 ரன்கள் விளாசினார். அவருடன் கை கோத்த ஹேண்ட்ஸ்கோம்ப் 84 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து வென்றது ஆஸ்திரேலியா. ஸ்மித் 104, டிராவிஸ் ஹெட் 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஸ்மித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

SMITH

Related posts: