85 பரப்பு நெற்பயிர் அழிவுக்கு காப்புறுதி இழப்பீடாக 108 ரூபா – நவாலி விவசாயிகள் அதிர்ச்சி: அதிர்ச்சி!

Friday, August 3rd, 2018

இயற்கை அனர்த்தத்தால் 85 பரப்பு நெற்செய்கை அழிவுக்கு நஷ்டஈடாக 108 ரூபா கமநல காப்புறுதி சபையால் வழங்கியதையடுத்து நவாலி விவசாயி அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வடக்கு விவசாயிகள் கமநல காப்புறுதி சபையினாலும் ஏமாற்றப்படுவதாகவும் விவசாயிகளால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது:

நவாலி வடக்கிலும் நவாலி தெற்கிலும் 85 பரப்பில் நெற்செய்கையை 2017 இல் மேற்கொண்டிருந்தார். இதன்போது முதலில் பெய்த மழையால் பெரும்பாலான நெற்பயிர் அழிந்த நிலையில் எஞ்சிய பயிர்கள் பின்னர் கடும் வறட்சியினால் அழிந்தது.

இதற்காக காப்புறுதி முகவர்கள் காப்புறுதி அழிவுப் பத்திர வடிவத்தில் 85 பரப்பு நெற்செய்கை அழிவுக்கு 30 பரப்பு என சிபார்சு செய்து காப்புறுதிச் சபை நிதிப்பிரிவுக்கு அனுப்பியுள்ளனர். இதனை நல்லூர் காப்புறுதிச் சபைக்குப் பொறுப்பான அலுவலர் தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட விவசாயின் 85 பரப்புக்கும் காப்புறுதி நிதியாக பரப்புக்கு 20 ரூபா வீதம் 1700 ரூபா காப்புறுதிச் சபைக்கு வழங்கியிருந்தார். ஆனால் காப்புறுதிச் சபை 108 ரூபாவினை வழங்கி சம்பந்தப்பட்ட நவாலி வடக்கு விவசாயியை ஏமாற்றியுள்ளது.

இந்நிதியானது ஒரு கிலோ சீனி கூட கொள்வனவு செய்ய முடியாது எனவும் இவ்வாறே வடக்கு மாகாண விவசாயிகள் குறிப்பாக யாழ் மாவட்ட விவசாயிகள் கஷ்டத்தின் மத்தியிலும் விவசாயச் செய்கை மேற்கொண்டபோதும் இவ்வாறான திட்டமிட்ட செயல் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக பாதிப்பினையே சந்திக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் அக்கறை எடுப்பார்களா எனவும் விவசாயிகளால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Related posts: