கல்வி வெளியீட்டு திணைக்கள பணிப்பாளரின் இடமாற்றம் இரத்து!

Friday, August 9th, 2019


கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எம்.கே.பீ. இளங்கசிங்கவின் இடமாற்றத்தை, அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இடை நிறுத்தியுள்ளது.

அதற்கமைய ஐ.எம்.கே.பீ. இளங்கசிங்க முன்னர் வகித்த பணிப்பாளர் பதவியே அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கல்வி வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்படும் புத்தகங்களில் கல்வி அமைச்சரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் தான் சாட்சி வழங்கிய பின்னர் இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஐ.எம்.கே.பீ. இளங்கசிங்க முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்கவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் வினவிய நிலையில் குறித்த இடமாற்றம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் உத்தரவிற்கமையவே வழங்கப்பட்டதாக அவர் ஏற்றுக்கொண்டார்.

இதனை ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு, மேற்குறித்த காரணத்தை தவிர வேறு காரணங்கள் இல்லாமையால் கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எம்.கே.பீ. இளங்கசிங்கவிற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் அரச சட்டத்தரணிகள் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

Related posts: