வல்லவர்களின் கையில் ஆட்சியதிகாரம் இருந்திருந்தால் வடக்கு மக்களின் வாழ்வியலுடன் அரசியலுரிமையையும் வெற்றிகண்டிருக்க முடியும் –  வை.தவநாதன்!

Wednesday, October 24th, 2018

வல்லவர்களின் கையில் வடமாகாண ஆட்சியதிகாரம் கிடைத்திருந்தால் இந்த புல் ஆயுதத்தை கொண்டே எமது மக்களின் வாழ்வியல் அபிவிருத்தியையும், அரசியல் உரிமையையும் முன்னோக்கி நகர்த்தியிருக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான வை.தவநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்

முமுதலாவது வடக்கு மாகாணசபையின் இறுதி அமர்வு நேற்றையதினம் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் –

ஈழத் தமிழ் மக்களின் நீண்டகால போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் கிடைத்த ஒரு அதிகாரப் பரவலாக்க அலகே மாகாண சபை ஆகும். இது அரசியலைமைப்பின் 13 வது திருத்த சட்டத்தின் மூலம் சட்டபூர்வமானதாக இருக்கின்றது. இதற்கு உபகண்ட வல்லரசான இந்தியாவின் அனுசரணையே பெரும் பலமாக இருந்தது.

ஆனால் போலித்தேசியம் பேசி மக்களாணையை பெற்ற தமிழரசுக் கட்சி தலைமயிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த புல் ஆயுதத்தை தொட்டுக் கூட பார்க்கவில்லை. மாறாக அதன் ஆட்சிக்காலத்தின் முற்பாதிக் காலத்தில் நான் சார்ந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியையும் அதன் தலைவர் அவர்களையும், முன்னாள் ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் அவர்களையும் அவதூறு செய்வதிலேயே காலத்தை வீணடித்தது. பிற்பாதியில் தங்களது ஆளும் கூட்டணிக்குள் உள்ள முரண்பாடுகளை வாந்தியெடுக்கும் களமாக மாகாண சபையினை பயன்படுத்தியது.

இதன் விளைவு தான் கடந்த ஒரு வருட காலமாக தாங்களே தெரிவுசெய்த ஆளும் கட்சியை மக்களும், ஊடகங்களும் வடக்கு மாகாண சபை மீது நியாயமான கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றார்கள். அதன் உச்சக்கட்டமாக இலங்கை அரசாங்கத்தின் நேரடி ஆட்சியே பரவாயில்லை எனும் கருத்துக்கள் மேலோங்கியுள்ளமை கண்கூடானது.

இது மிகவும் துரதிஷ்டமான ஒரு நிலையாகும். இது நொந்து போயுள்ள ஈழத் தமிழினத்திற்கு தங்கள் தலைவர்களாலேயே இழைக்கப்பட்ட அநீதியாகும்.

ஆளும் கட்சியை விடுத்து இந்த அவையாவது சரியாக இயங்கியதா என்றால் அதுவும் இல்லை என்றே கூற வேண்டும். குறைந்தது 100 நியதிச்சட்டங்களையாவது ஆக்கியிருக்க வேண்டிய நிலையில் வெறும் 19 நியதிச்சட்டங்களே  ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் சில பிரேரணைகளை தவிர 400 க்கும் மேற்பட்ட பிரயோசனமற்ற பிரேரணைகளே நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிதி மோசடி, அதிகார துஸ்பிரயோகம், செயல்திறனின்மை போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்த போது ஓய்வு பெற்ற இரண்டு நீதிபதிகள், ஒரு நிர்வாக சேவை அதிகாரியைக் கொண்ட விசாரணைக்குழுவினால் மேற்படி குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டு முதலமைச்சர் தவிர்ந்த ஒட்டுமொத்த அமைச்சர்கள் சபையையும் மாற்றுமாறு பரிந்துரைத்ததும் முதலமைச்சரால் பதவி விலக்கப்பட்டு, புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்களில் இருவர் மீது ஒரு மாத காலத்திற்குள்ளேயே ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதும் உலகத்திலேயே இதுவரை நடந்திராத வெட்கம்கெட்ட செயலாகும்.

அத்துடன் மூத்த அனுபவசாலியான அவைத்தலைவரான தாங்களும் அவ்வாசனத்திலிருந்து சில சந்தர்ப்பங்களில் கட்சி சார்பாகவே செயற்பட்டீர்கள். உதாரணமாக மூன்றாவது எதிர்க்கட்சித் தலைவர் நியமனம்,  முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளுனரிடம் கையளித்தது.  “நான் முதலில் தமிழரசுக் கட்சிக்காரன் தான் பின்னர் தான் அவைத்தலைவர்” என்று இவ் உயரிய ஆசனத்திலிருந்தே பல தடவைகள் கூறியது போன்ற மேலும் பல தவறான சந்தர்ப்பங்களும் இவ் உயரிய சபையின் மரபை மீறியுள்ளது என்பதையும் மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Related posts: