வடக்கு – கிழக்குப் பெண்களை இலக்கு வைத்து மனித வியாபாரம்- அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ!

Saturday, September 15th, 2018

வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் பெண்களே தரகர்களால் ஏமாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள பெண்களே வேலைவாய்ப்புக்காக அதிகமாக வெளிநாடுகளுக்குச் செல்கின்றார்கள். தரகர்களினால் இந்த பெண்கள் அனுப்பப்படுகின்றார்கள் என்று தெரியவந்துள்ளது.

இங்குள்ள பெண்களுக்கு மொழி மற்றும் தொழில்நுட்ப அறிவு போதியளவு இல்லாத காரணத்தினால் பெரியளவு பெண்கள் பாதிக்கப்படுவதை நாம் அவதானித்துள்ளோம்.

இவ்வாறு பெண்களை ஏமாற்றி அனுப்பும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகங்களைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் நான் ஓமானுக்குச் சென்ற போது 16 வயது சிறுமியொருவரை சட்ட விரோதமாக அங்கு அனுப்பியுள்ள விவகாரம்  தெரியவந்தது. தற்போது அந்தச் சிறுமியை மீட்டு இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பில் வைத்துள்ளோம். இவரை அடுத்தவாரம் இலங்கைக்குக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தச் சிறுமி இரண்டு தடவைகள் தூதரகத்தில் வைத்து தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு  முயற்சியிலும் ஈடுபட்டார். இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் இறுதியில் அதற்கான குற்றத்தையும் எம்மீதே சுமத்தப்படும்.

இந்தச் சிறுமி சுற்றுலா நுழைவு விசைவு (விசா) மூலம் டுபாய் சென்று வாகனம் ஒன்றின் ஊடாகவே சட்டவிரோதமாக ஓமான் சென்றுள்ளார். இதற்கு உதவியதும் டுபாயில் வசிக்கும் இரு பெண்கள் தான். இது தொடர்பில் நாம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கும் முறைப்பாடு அளிக்கவுள்ளோம்.

இவ்வாறு மத்திய கிழக்கில் மனித வியாபாரமே இடம்பெறுகின்றது. ஓமான், ஜோர்தான், குவைத், டுபாய், சவுதி போன்ற நாடுகளிலும் இந்தப் பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் ஊடாகவே தரவரிசை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

Related posts: