முதல் அரசு முறை பயணமாக மாலத்தீவு செல்லும் இந்தியப் பிரதமர்! நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்!

Saturday, June 8th, 2019

17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகளில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தன்னுடைய இரண்டாவது ஆட்சியில் முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவுகள் மற்றும் இலங்கை செல்ல உள்ளார். ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் முறையே அந்தந்த நாடுகளுக்கு செல்கிறார் மோடி.

இன்று மாலை, மாலத்தீவுகளுக்கு செல்வதற்கு முன்பு திரிசூரில் அமைந்திருக்கும் குருவாயூர் கோவிலுக்கு சென்று கிருஷ்ணனை வணங்கிவிட்டு அங்குள்ள பாஜக தொண்டர்களிடம் பேச உள்ளார் மோடி.

மோடி மாலத்தீவிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு சார்க் மாநாடு மற்றும் இருநாடுகளுக்கு இடையே இருக்கும் உறவினை மேம்படுத்த 2011ம் ஆண்டில் மன்மோகன் சிங் மாலத்தீவிற்கு பயணம் செய்துள்ளார்.

பல்வேறு துறைகளில் வகுக்கப்பட்டுள்ள திட்டம் சார்ந்த ஆலோசனைகளில் இரு நாட்டு தலைவர்களும் பேசுவார்கள் என்று வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.  அந்நாட்டின் அதிபர் இப்ராஹிம் சோல்ஹ், துணை அதிபர் பைசல் நசீம், சபாநாயகர் மற்றும் முன்னாள் அதிபர் முகமது நஷீத் ஆகியோரை நேரில் சந்தித்து பேச உள்ளார் மோடி.

மாலத்தீவுகளின் நாடாளுமன்றத்தில் பேச இருக்கும் மோடி பின்னர் கடற்கரை பாதுகாப்பு மற்றும் ரேடார் சிஸ்டம் தொடர்பான பல முக்கிய திட்டங்களுக்கான கையெழுத்துகளையும் இட உள்ளார்.

மாலத்தீவுகள் சுற்றுப்பயணம் முடிந்தவுடன் இலங்கை செல்லும் அவர், புனித ஞாயிறு அன்று இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக பேச உள்ளார். இந்த கோர விபத்திற்கு பின்பு இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் மோடி ஆவார்.

Related posts: