மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய மின்சார சபைக்கு அனுமதி – நாளைமுதல் எரிபொருள் விநியோகமும் வழமைக்கு திரும்பும் – எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே அறிவிப்பு!

Tuesday, March 8th, 2022

மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றிருந்தது. எனினும் இதில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கலந்து கொண்டிருக்கவில்லை.

அவர் இதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, தாம் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில் ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் நேற்று முதலாவது அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் நாளை 09 ஆம் திகதிமற்றும் நாளைமறுதினம் 10 ஆம் திகதிகளில் வழமைக்கு திரும்புமெனவும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இரண்டு கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆயினும், நேற்றையதினமும் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அதிக தேவை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்புகளை மட்டுமே தொடர்ந்து விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: