தீர்வை சீர்குலைக்கும் விக்கி : வாசுதேவ நாணயக்கார

Monday, May 30th, 2016
ஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்கினேஸ்வரன் தமிழர் பிரச்சினை தீர்வை சீர்குலைக்கின்றார் எனக் குற்றம்சாட்டுகிறார் வாசுதேவ நாணயக்கார.

ஜெயலலிதா – இந்தியா அல்ல. தமிழ் நாடு என்ற மாநிலத்தின் முதலமைச்சரே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்-

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் அரசாங்கம் உட்பட எதிர்க்கட்சியில் எம்மைப் போன்ற சிலர் இணைந்து வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருவதோடு பிரச்சினைகள் தீரும் நிலை ஏற்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரச்சினைகளை மீண்டும் ஆரம்ப நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்சியை முன்னெடுக்கின்றார்.

அதாவது தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலையீட்டை கோருவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளை சீர்குலைக்கின்றார்.

விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் சந்தேக நிலையை தோற்றுவிப்பதாக உள்ளது.

ஏற்கனவே சிங்கள மக்கள் மத்தியில் அச்சம் குடிகொண்டுள்ளது. அதாவது தமிழ் நாட்டுடன் இணைத்து வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் அரசியல்வாதிகளும் சிங்கள மக்களுக்குப் பாதகமான தீர்மானங்களை எடுப்பார்கள் என்ற அச்சமே அதுவாகும்.

அவ்வாறானதோர் நிலையில் விக்கினேஸ்வரன் ஜெயலலிதா இலங்கை விடயத்தில் தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இது தீர்வை நோக்கி நகரும் பிரச்சினையை மீண்டும் ஆரம்ப நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகும்.

அத்தோடு அனைத்து தரப்பினரும் இணைந்து பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதனை திட்டமிட்டுச் சீர்குலைக்கும் செயலாகவே உள்ளது.

தமிழ் மக்களும் – சிங்கள மக்களும் இணக்கப்பாட்டுடன் செயற்பட முன்வந்துள்ள சூழ்நிலையில் விக்கினேஸ்வரன் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்.

ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதல்வரே தவிர ஜெயலலிதா என்பது இந்தியா அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.

Related posts: