தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பொதுமக்களின் உரிமைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது!

Saturday, July 15th, 2017

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பொதுமக்களின் உரிமைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று சபாநாயகர் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் சில வருடங்களில் இதன் பயன்களை நாடு பெற்றுக்கொள்ளும். சுயாதீன ஆணைக்குழு தற்பொழுது செயற்படுகிறது. கடந்த காலங்களில் இது வெறும் கனவாகவே இருந்து வந்தது என்றும் அவர் கூறினார்.

சமகால அரசாங்கத்தின் கீழ் எந்த வகையிலும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. தற்போது அதிகாரத்தில் உள்ளோர் ஊடக சுதந்திரத்திற்காக பெரும் அர்ப்பணிப்பை மேற்கொண்டவர்களாவர் என்று சபாநாயகர் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற செய்திகளை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்காக களுத்துறையில் நேற்று நடைபெற்ற செயலமர்வில் சபாநாயகர் உரையாற்றினார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் மற்றும் அமெரிக்காவின் நிதி உதவியுடனான வேலைத்திட்டத்துடன் இணைந்து இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலமையில் ஊடக ஒடுக்கு முறைக்கு எந்தவித இடமும் இல்லை என்றும் கூறினார்.இங்கு உரையாற்றிய பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, பாராளுமன்ற செய்திகளை எழுதுவதில் வானொலி ஊடகவியலாளர்களின்  செயற்பாடுகள் உயர்வான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார். தொலைக்காட்சி மூலமான செய்திகளை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதில் திருப்திகரமான நடவடிக்கை இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உரையாற்றுகையில் பாராளுமன்றத்தின் வல்லமை பாராளுமன்ற செய்திகளை வெளியிடுபவர்களில் தங்கியுள்ளது என்றார்.

Related posts: