டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Friday, August 27th, 2021

டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல், மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் எனவும் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரத்தினுள் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 20க்கும் அதிகமானோருக்கு அவசர சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த அபாயநிலை காரணமாக, எவருக்கேனும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அடிப்படை அறிகுறிகள் வெளிக்காட்டும் பட்சத்தில், அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிப்பது சாலச்சிறந்தது என வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின்போது, இவ்வாறான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கும் வைத்திய நிபுணர், மூன்றாவது அலையின்போது தோற்றம் பெற்ற டெல்டா திரிபின் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு மாரடைப்புக்கு உள்ளாகி வைத்தியசாலையில்  அனுமதியாகும் பெரும்பாலானோர் இளம் வயதினர் என்றும், இவர்கள் மாரடைப்புக்கு காரணமாகும் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், நீரிழிவு போன்ற எந்தவொரு நோய்களையும் கொண்டிராதவர்கள் எனவும் வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: