சாதகமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை – அனுரகுமார திசாநாயக்கவினால் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமானால் பதவியில் இருந்து விலகத்தயார் – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Tuesday, July 5th, 2022

பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையை அடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த அவர், 2023 ஆம் ஆண்டு, நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பொருளாதார மீளமைப்புக்கான வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளாக இருந்தன. எனினும் தற்போது வங்குரோத்து நாடாக இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் கடன் மீளமைப்பு, மற்றும் பொருளதார ஸ்திரத்தன்மை என்பவற்றை சர்வதேச நாணய நிதியத்துக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும். இதனையடுத்தே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் திட்டத்துக்கு செல்லமுடியும்.

அத்துடன் இந்தியா, சீனா. ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில் பணம் அச்சிடல் நிறுத்தப்படுவதற்கான தயார் நிலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் நாடு, 2018 இன் நிலைக்கு செல்வதற்கு 2026ஆம் வருடம் வரையில் காத்திருக்கவேண்டும்.

இதேநேரம் இலங்கை அரசாங்கம் இந்த ஜூன் 3489 மில்லியன் டொலர்களை கடனாக செலுத்தவேண்டும், அத்துடன் 2023 முதல் 2026 ஆம் ஆண்டு வரை 28 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்துவேண்டியுள்ளது.

இதுதான் உண்மை நிலை. இன்று நமது தேசிய கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 140வீதமாகும்.

இன்று நமது வருமானம் மொத்த உள்நாட்டு வருமானத்தில் 7.3 வீதமாகும். 2026 ஆம் ஆண்டுக்குள் அதை 14 வீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

அத்தோடு, IMF உடன் இணைந்து 2032 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 95 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்”

இதேவேளை, ஜேவியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்ட பொருளாதார அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தமுடியுமானால், அது நோபல் பரிசுக்கு உரிய திட்டமாக அமையும்.

இந்தநிலையில் திட்டத்தை முன்கொண்டு செல்ல அனுரகுமார தயார் எனில் தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகத்தயார் என்றும் ரணில் விக்ரசிங்க தெரிவித்தார்.

அத்துடன் அவரிடம் ஆட்சியை வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்ததாகவும் எனினும் அது சாத்தியமில்லாத விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு அவரிடம் ஏதேனும் ஒரு திட்டம் இருக்குமானால், அதை தான் வரவேற்பதாகவும் அந்தத் திட்டத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க விருப்பம் இல்லையென்றால் நாடாளுமன்றத்திலாவது அதனை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: