சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் யாழ். மாநகர சபையினர் பாரபட்சம் -பொதுமக்கள் குமுறல்!

Tuesday, February 5th, 2019

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் படைத்தவர்கள் எந்தச் சட்ட அனுமதியும் பெறாது சர்வ சாதாரணமாக வர்த்தக நிலையங்களை பிரதான வீதியில் கட்டுகின்றனர். ஆனால் ஓலைக்கொட்டிலில் வாழும் மக்கள் வீடு கட்ட அனுமதி கோரினால் ஒழுங்கையின் அகலம் போதாது என்று பல காரணங்கள் கூறிக் காலம் இழுத்தடிக்கப்படுகின்றது இவ்வாறு குற்றஞ்சாட்டுகின்றனர் வரி இறுப்பாளர்கள்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவித்ததாவது:

இவற்றை அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் தருவதில்லை. பணியில் தவறு செய்வது மட்டும் சட்டவிரோதம் அல்ல. தவறைத் தடுக்க வேண்டிய அதிகாரம் உள்ளவர்கள் அதைத் தடுக்காதிருப்பதும் சட்டவிரோதமே. ஏழைகளே பாதிக்கப்படுகின்றனர். பணம் படைத்தவர்கள் சர்வ சாதாரணமாக அனைத்தையும் செய்துகொள்கின்றனர். அவற்றைத் தட்டிக் கேட்டுத் தடுக்க வேண்டிய அதிகாரிகளோ கண்டும் காணாதவர்கள் போன்று இருந்து விடுகின்றனர்.

அதிகாரிகளிடம் ஏதாவது கேட்டால் 30 பேரின் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளோம் என்று புள்ளிவிபரங்களைக் கூறுகின்றனர். ஆனால் அதை விடப் பலமடங்கு அதிகமாகச் சட்டவிரோதக் கட்டடப் பணிகள் இடம்பெறுகின்றன. பெரும் பெரும் கட்டடங்கள் கட்டும்போது வாய்மூடி இருந்துவிட்டு 700 சதுர அடியும் தேறாத குடியிருப்புக்களை கண்ணும் கருத்துமாகக் கண்காணிக்கின்றனர்.

காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி, கஸ்தூரியார் வீதி என்பவற்றிலும் பல வர்த்தக நோக்கத்துடனான கட்டடங்கள் அனுமதி பெறாது கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அறியமுடிகின்றது. ஆனால் குடியிருப்பதற்குச் சிறிய வீடு கட்டும்போது அனுமதி மறுக்கப்படுகின்றது.

இந்த விடயத்தில் மாநகர முதல்வர், ஆணையாளர், உரிய அதிகாரிகள், சபையின் உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டும். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: