கொரோனா தொற்றால் மோசடைந்து செல்கிறதா இலங்கையின் நிலைமை: இன்றும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதி !

Monday, April 27th, 2020

உலக நாடுகளைக் அச்சுறுத்திவரும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தற்போது இலங்கையிலும் தனது வீரியத்தை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை மருத்துவத் தரப்பினரது தற்போதுவரையான அறிக்கையின் பிரகாரம் 567 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுடன் 40 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று 63 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் இறுதியாக இனங்காணப்பட்ட 44 பேரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பு மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அத்துடன் நேற்றையதினம் பதிவான 63 நோயாளர் தொகையானது இலங்கையில் இதுவரை ஒரே நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட எண்ணிக்கையாகப் பதிவாகியுள்ளது.

நேற்றுப் புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 53 பேர் வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்தவர்கள் எனவும், 10 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவர் மூலம், சீதுவை இராணுவ விசேட முகாமிலுள்ள கப்டன் தர அதிகாரியான அவரது கணவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, சீதுவை இராணுவ முகாம் நேற்றிலிருந்து முடக்கப்பட்டு அங்குள்ள இராணுவத்தினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்புத்துறைக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவியதையடுத்து முப்படையைச் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்பட்ட விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய கொரோனா அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படவிருந்த நிலையில், விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை முகாம்களுக்கு அழைப்பதை இலகுபடுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் மிக வேகமாக தொற்று பரவ ஆரம்பதித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பகுதி வெளியிட்டுள்ள புள்ளிவிபரவியல் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் நோய் இனங்காணப்பட்டு 57 நாட்களில் முதலாவது 100 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இரண்டாவது 100  நோயாளர்கள் அடுத்த 19 நாட்களில் இனங்காணப்பட்டனர் என்றும் மூன்றாவது 100 நோயாளர்கள் அடுத்த 9 நாட்களில் இனங்காணப்பட்டனர் என்றும் நான்காவது 100 நோயாளர்கள் அடுத்த 4 நாட்களில் இனங்காணப்பட்டனர் என்றும் சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பகுதியினர் ஐந்தாவது 100 நோயாளர்கள் வெறும் 48 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.

இதனிடையே வடக்கில் தெற்கிலிருந்து ஒரே இரவில் ஆயிரத்து நூறு பேரை தனிமைப்படுத்த அனுப்பிய இலங்கை சுகாதார தரப்பினர் தொற்றின் அதிகரிப்பை கருதி மேலும் பல தனிமைப்படுத்தல் மையங்களை தேடிவருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ன.

ஏற்கனவே கிளிநொச்சியில் கொரோனா சிகிச்சை மையம் மேலதிக தனிமைப்படுத்தல் மையமென இலங்கை விமானப்படை மும்முரமாகியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் பலாலி, மிருசுவில் மற்றும் கொடிகாமம் படைமுகாம்களில் தனிமைப்படுத்தல் மையங்களை பேணிவந்த அரசு புதிதாக கோப்பாயிலுள்ள கல்வியியல் கல்லூரியிலும் புதிய தனிமைப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டது.

குறித்த கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் விடுமுறைக்காக தமது ஊர்களுக்கு சென்ற இராணுவ வீரர்கள் மீள கடமைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதாகவும், இதன்படி இரண்டு விடுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே இலங்கை வான்படை உறுப்பினர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 12ஆம் திகதியன்று கடற்படையினருடன் இணைந்து இசை நிகழ்வு ஒன்றில் பங்கேற்றவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக வான்படையின் பதில் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்

இலங்கையில் தற்போதுவரை 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 434 நோயாளிகள் 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 138 பேர் கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும், 58 பேர் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையிலும், 67 பேர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும், 21 பேர் இரணவில வைத்தியசாலையிலும், 55 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும், 06 பேர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையிலும், 45 பேர் வெலிசறையிலுள்ள கடற்படை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 295 பேர் 32 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: