கொரோனாவை கட்டுப்படுத்தும் பயணத்தடைக்கு வடபகுதி மக்கள் பூரண ஒத்துழைப்பு – மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட நகரங்கள்!

Friday, May 14th, 2021

எதிர்வரும் திங்கள் அதிகாலைவரை தொடர்ச்சியாக விதிக்கப்பட்ட பயணத்தடையை அடுத்து நாடு முழுவதும் பொதுமக்களின் நெருக்கமான தொடர்பாடல்கள் தடுக்கப்பட்டுள்ளது. நிலையில் வடபகுதி மாவட்டங்களும் முற்றாக முடங்கிய நிலையில் காட்சியளித்தன.

குறிப்பாக யாழ்ப்பாண நகரத்தின் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட சன நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுடன் கிராமப் பறங்களும் மக்களின் நடமாட்டம் இன்றி காணப்பட்டன. அதேநேரம் மிகமிக அத்தியாவசிய சேவைகள் தமது சேவைகளை முன்னெடுத்திருந்ததுடன் மிக அவசிய தேவைகருதி செல்லும் மிக சொற்ப மக்களின் நடமாட்டமும் காணப்பட்டன.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் சுகாதார பிரிவினருக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு சுகாதார பிரிவும், பாதுகாப்பு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் யாழ் மாவட்ட மக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

இதேவேளை

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை ழுழுவதும் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்தின் இயல்பு நிலையும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவின் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் வருகின்றவர்களை எச்சரித்து, திருப்பி அனுப்பி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வவுனியா பகுதியிலுள்ள அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஒருசில மருந்தகங்கள் மாத்திரம் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களும் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரது கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க 

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களும் முற்றாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மாவட்டங்களின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படுள்ளதுடன், பிரதான சந்தை உட்பட போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன.

மாவட்டத்தில் பல பகுதிகளில் முப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் செல்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: