ஐ.நா சமாதான படையணிகளின் விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு!

Friday, June 21st, 2019

ஐ.நா அமைதிகாக்கும் பணிக்காக பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை விடுவிக்கின்ற போது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் தடை நீக்க நடவடிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி, அனைத்து தரப்பினர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒருங்கிணைப்புடன் இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.

உரிய காலத்திற்கு அதிகாரிகளை அச்சேவைக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுவதன் காரணமாக அச்சந்தர்ப்பம் இலங்கைக்கு கிடைக்கப்பெறாமல் போவதுடன், அது நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் பாதகமான நிலைமையை ஏற்படுத்துமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் திறமைவாய்ந்த இராணுவம் என்ற வகையில் எமது முப்படையினருக்கு ஐ.நா அமைதிகாக்கும் பணியில் அதிக கேள்வி உள்ள அதேவேளை, பல்வேறு வெளிநாடுகளில் எமது முப்படையினருக்கு பயிற்சி சந்தர்ப்பங்களும் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அச்சந்தர்ப்பத்தை உரிய முறையில் அந்த உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான முறைமைகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பணிப்புரை விடுத்தார்.

2004 ஆம் ஆண்டு முதல் இலங்கை ஐ.நா அமைதிகாக்கும் பணிக்கு பங்களிப்பை வழங்கிவருவதுடன், தற்போது பெருமளவு படையினர் அச்சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்மூலம் அவ் உறுப்பினர்கள் பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் உள்ள அதேவேளை, அவர்களது தொழிற் திறனும் வளர்ச்சியடைந்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட உள்ளிட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம உள்ளிட்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Related posts:


யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார சேவைகள் பணிப்பாள...
காற்று மாசுபாடு அதிகரிப்பு - துவிச்சக்கரவண்டி பாவனையை மேம்படுத்த நடவடிக்கை - சில ஊக்குவிப்பு சலுக...
பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களிலும் உணவுப் பயிர்களைப் பயி...